சிரிப்பை அடக்க முடியாமல் மோதிக்கொண்ட விராட் கோலி – இஷாந்த் சர்மா.. ரசிகர்களை நெகிழ வைத்த நட்பு

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 62வது லீக் போட்டியில் டெல்லியை 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரஜத் படிடார் 52, வில் ஜேக்ஸ் 41, கேமரூன் க்ரீன் 32* ரன்கள் எடுத்தனர். டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது மற்றும் ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த டெல்லி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நண்பர்களின் மோதல்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தற்காலிக கேப்டன் அக்சர் படேல் 57 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக இந்தப் போட்டியில் டெல்லி வீரர் இஷாந்த் சர்மா வீசிய ஒரு பந்தில் விராட் கோலி அட்டகாசமான சிக்சரை பறக்க விட்டார்.

அப்போது “எப்படி அடித்தேன் பார்த்தியா” என்ற வகையில் அவரிடம் விராட் கோலி ஜாலியாக சிரித்துக் கொண்டே வம்பிழுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே இஷாந்த் சர்மா வீசிய மற்றொரு பந்தில் விராட் கோலி கேட்ச் கொடுத்து 27 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது “உன்னை எப்படி அவுட்டாக்கினேன் பார்த்தியா” என்ற வகையில் சிரித்துக்கொண்டே விராட் கோலியை இடித்து தள்ளிய இஷாந்த் சர்மா பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் கடைசி பேட்ஸ்மேனாக இஷாந்த் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். அப்போது 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். அதைப் பார்த்த விராட் கோலி சிரிப்பை அடக்க முடியாமல் “முடிந்தால் என்னை போல் சிக்ஸர் அடி” என்ற வகையில் சிரித்து அவரை கலாய்த்தார். அப்படி அந்த இருவரும் மாறி மாறி கலாய்த்துக்கொண்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: விராட் கோலியிடம் நிறைய கத்துக்கிறோம்.. மதிப்பு குறையாது.. நிகராக சாதனை படைத்த முகமது ரிஸ்வான் பேட்டி

குறிப்பாக விராட் கோலி மற்றும் இசாந்த் சர்மா ஆகிய இருவருமே டெல்லியில் பிறந்து உள்ளூரில் ஒரே அணிக்காக விளையாடி நாளடைவில் இந்தியாவுக்காகவும் ஒன்றாக விளையாடினர். அந்த வகையில் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கும் அவர்கள் இப்போட்டியில் எதிரெதிர் அணிகளில் மோதினார்கள். இருப்பினும் நட்பை மறக்காத அவர்கள் களத்தில் இப்படி ஜாலியாக மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement