ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்தது. அதன்காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இந்திய அணி இழந்தது. அதற்கடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் :
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்து விட்டதால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியை கருத்தில் கொண்டு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரின் போதும் சிறப்பாக செயல்படாததால் அவர் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்று தெரிகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று பேசப்பட்ட வேளையில் தான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஓய்வு குறித்த எந்த ஒரு எண்ணமும் தற்போது எனக்கு இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
ஆனாலும் ஆஸ்திரேலிய தொடரின் போது அவரது பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்ததால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரின் 3 போட்டியில் விளையாடிய அவர் 6 ரன்கள் சராசரியுடன் வெறும் 31 ரன்கள் குவித்திருந்தார். அதேவேளையில் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இங்கிலாந்து தொடரில் இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது அவர் சதம் அடித்து அசத்தியிருந்தார். அந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவரது ஆட்டம் சுமாராக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் அவர் டெஸ்ட் அணியில் விளையாட வேண்டிய வீரர் என்பதனால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : வருண் சக்ரவர்த்தி சிறப்பான லெவலில் முன்னேறிட்டாரு.. அவருக்கு இந்த ஹெல்ப் செய்வதே என் வேலை.. மொய்ன் அலி
அதேபோன்று ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டால் அவருக்கு பதிலாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.