விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி துவங்குகிறது. அதில் இந்தியாவுக்காக சர்பராஸ் கான் அல்லது ரஜத் படிடார் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் வெளியேறினார்.
போதாக்குறைக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளனர். எனவே விராட் கோலிக்கு பதிலாக விளையாடி காயத்தால் வெளியேறிய கேஎல் ராகுலின் அந்த இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு சர்பராஸ் கான் மற்றும் ரஜத் படிடார் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
வாய்ப்பு யாருக்கு:
இருப்பினும் அதில் விளையாடும் 11 பேர் அணியில் ஒருவருக்கு மட்டுமே அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சீனியர் அணிக்கு வந்துள்ள அந்த 2 வீரர்களில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமாக இருப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
எனவே அது பற்றிய இறுதி முடிவை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் நாளை எடுப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “அது கடினமான தேர்வாகும். மிகவும் சூப்பரான இந்த வீரர்கள் அணிக்கு மதிப்பை சேர்ப்பார்கள். கடந்த சில வருடங்களாக உள்ளூர் தொடரில் அவர்கள் எந்த அளவுக்கு அசத்தியுள்ளார்கள் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம்”
“எனவே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர்கள் இந்திய அணிக்கு பெரிய மதிப்பை சேர்ப்பார்கள். இருப்பினும் இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைமை கடினமாகும். ஆனால் இந்த முடிவை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் நாளை எடுப்பார்கள். இத்தொடரின் பிட்ச் கணிப்பதற்கு கடினமாக இருக்கிறது. அது முதல் நாளிலேயே சுழலாம். அல்லது சில நாட்கள் கழித்து சுழலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த சீசன் நீ பவுலிங் போடக்கூடாது.. மகேஷ் தீக்ஷனாவை செல்லமாக கடிந்த தோனி – எதற்கு தெரியுமா?
முன்னதாக ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்யும் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே 2வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



