விராட், ரோஹித் இடத்தை நிரப்புவது ஈஸியில்லை.. அந்த 2 பேர் தான் இந்தியாவின் வருங்காலம்.. விக்ரம் ரத்தோர்

Vikram Rathour 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விடை பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் 35 வயதை கடந்து விட்ட அவர்கள் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு விடை பெற்றுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற மகத்தான வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்திய அணியில் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் வருங்காலம்:
குறிப்பாக கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் வருங்கால பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் மற்றும் ரோஹித் ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. இருப்பினும் நிறைவு பெற்ற ஜிம்பாப்வே தொடர் நம்முடைய வருங்கால டி20 அணி எப்படி இருக்கும் என்பதை காட்டியது”

“ஆனால் இப்போதும் நமக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த புள்ளியை தொடுவதற்கு இன்னும் சில வருடங்கள் உள்ளது. எனவே அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் நிறைய ஆழம் இருக்கிறது. நம்மிடம் திறமையான நுணுக்கங்கள் நிறைந்த வீரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். எனவே அவர்களை கட்டுப்பாட்டுடன் மாற்ற வேண்டும்”

- Advertisement -

“குறிப்பாக ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் போன்ற இன்னும் சில வீரர்கள் இப்போதே அடுத்த தலைமுறையில் அசத்தக் கூடியவர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல தயாராக உள்ளனர். அது போல இன்னும் நிறைய வீரர்கள் வருகின்றனர்”

இதையும் படிங்க: உண்மையா அவருக்குத் தான் பெரிய மனசு.. 10 வருட பிரச்சனையை முடிச்சு வெச்சுட்டாரு.. அமித் மிஸ்ரா பேட்டி

“ஆனால் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் நீண்ட காலமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடியவர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்கள் வரும் காலங்களில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா போன்ற இன்னும் தரமான வீரர்கள் தயாராக இருப்பதால் இந்திய அணி தொடர்ந்து மேலே செல்லும் என்று நம்பலாம்.

Advertisement