தென்னாப்பிரிக்க மண்ணில் சரித்திரம் படைப்பதற்காகவே அவர ரெடி பண்றோம் – சீனியர் வீரருக்கு பேட்டிங் கோச் ஆதரவு

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. டாமினிகா நகரில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக செயல்பட்டு சதமடித்து 171 ரன்கள் விளாசி நிறைய சாதனைகளையும் படைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Rahane

- Advertisement -

அதே போல கேப்டன் ரோகித் சர்மாவும் தம்முடைய தரத்துக்கு நிகராக சதமடித்து 103 ரன்கள் எடுத்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மெதுவாக விளையாடினாலும் 76 ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் அந்த போட்டியில் துணை கேப்டனாக களமிறங்கிய அஜிங்க்ய ரகானே 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 89, 46 ரன்களை அடித்து குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றிய அவர் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து நல்ல ஃபார்மில் இருந்தும் இந்த போட்டியில் அவுட்டானது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

தரமான ரகானே:
இந்நிலையில் இந்த தொடர் மட்டுமல்லாமல் வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரகானே நிச்சயமாக விளையாடுவார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் சுமாரான ஃபார்மில் இருந்ததால் மட்டுமே கடந்த 2022 பிப்ரவரியில் ரகானே கழற்றி விடப்பட்டதாக தெரிவிக்கும் அவர் தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் நீண்ட வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வரலாற்றில் தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஒரு முறை கூட இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லாத மோசமான சரித்திரத்தை இம்முறை நிறுத்த ரகானே உதவியாக இருப்பார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Vikram-Rathour

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் எப்போதுமே சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சுமாரான ஃபார்மில் இருந்த காரணத்தாலேயே அவர் நீக்கப்பட்டார். அதே போல டெக்னிக்கல் அளவில் அவர் தொடர்ந்து முன்னேறுவதற்கு முயற்சித்து வந்தார். ஆனால் அவர் எப்போதுமே மிகுந்த அமைதியாக தன்னுடைய அணுகு முறையில் செயல்படுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதை விட கம்பேக் கொடுத்ததிலிருந்து அவர் எப்போதுமே தன்னுடைய உடலுக்கு மிகவும் அருகே பந்தை எதிர்கொண்டு விளையாடுவது என்னை மிகவும் கவர்ந்துள்ளது”

- Advertisement -

“வலைப்பயிற்சியில் அவர் அப்போது போலவே இப்போதும் பேட்டிங் செய்கிறார். எனவே தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான சூழ்நிலைகளில் அசத்துவதற்கு நமக்கு அவரைப் போன்ற தரமான அனுபவமிக்க ஒருவர் அவசியமாகும்” என்று கூறினார். முன்னதாக கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் ரகானே இந்திய மண்ணை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.

Rahane

குறிப்பாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டாகி சரித்திர தோல்வியை சந்தித்து இந்தியா தடுமாறிய போது நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து காப்பாற்றிய அவர் அடுத்தடுத்த போட்டிகளில் முதன்மை வீரர்கள் காயத்தால் விலகிய போதும் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளம் வீரர்களை வைத்தே காபா கோட்டையை தகர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க:பாபரை விட சுமாரான டெக்னிக் கொண்ட விராட் கோலியை நானே ஈஸியா அவுட் பண்ணிருவேன் – முன்னாள் பாக் வீரர் அதிரடி

இருப்பினும் அதன் பின் தடுமாறியதால் கடந்த வருடம் நீக்கப்பட்ட அவர் மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்துள்ளார். அதனால் மீண்டும் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட தென்னாபிரிக்க தொடரில் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement