இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் குவித்தது. கில், புஜாரா, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என தடுமாறிய இந்தியாவுக்கு அதிரடியாக காட்டிய ரிஷப் பண்ட் 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர்.

கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா யாருமே எதிர்பாராத வகையில் உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சு முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
சறுக்கிய இந்தியா:
அதனால் 132 என்ற பெரிய ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் பேட்டிங் செய்து 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கில், விஹாரி, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மென்கள் மீண்டும் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் வெறும் 245 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவிற்கு அதிக பட்சமாக அனுபவத்தை காட்டிய புஜாரா 66 ரன்களும் ரிஷப் பண்ட் 57 ரன்களும் குவித்து போராடி ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 378 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களின் அதிரடியால் 100/0 என்ற வலுவான தொடக்கத்தைப் பெற்று அச்சுறுத்தியது.

அப்போது அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா போராடிய போதிலும் அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் 76* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 72* ரன்களும் எடுத்துள்ளதால் 4-வது நாள் முடிவில் 259/3 ரன்களுடன் விளையாடி வரும் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 100 ஓவர்களில் வெறும் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் கையிலிருந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இந்த பரிதாப நிலைமைக்கு 2-வது இன்னிங்சில் 132 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா சுமாராக பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது.
ஒப்புகொண்ட இந்தியா:
குறிப்பாக கடைசி 7 விக்கெட்களை இழந்த இந்தியா வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேபோல் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் சிக்கி சொற்ப ரன்களில் நடையை கட்டியதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் 3 நாட்கள் வரை நல்ல நிலைமையில் இருந்த இந்தியா 4-வது நாளில் சுமாராக செயல்பட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் போட்டியில் முன்னோக்கி இருந்தோம். ஆனால் 4-வது நாள் எங்களுக்கு பேட்டிங்கில் சுமாராக அமைந்தது. ஒரு கட்டத்தில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை தோற்கடிக்கும் நிலையில் இருந்தோம். ஆனால் அதை முழுமையாக செய்யத் தவறிவிட்டோம். நிறைய வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்ற போதிலும் பெரிய ஸ்கோர்களாக மாற்றவில்லை. யாராவது ஒருவர் பெரிய இன்னிங்ஸ் அல்லது பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை. ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்”
“மேலும் அவர்கள் ஷார்ட் பால் நுணுக்கத்தை களத்தில் எங்களுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். அதை நாங்கள் சற்று வித்தியாசமாக கையாண்டிருக்க வேண்டும். அதை சமாளிக்க எங்களது வீரர்கள் ஷாட்களை அடிக்க முயற்சித்தபோது அவுட்டாகி விட்டார்கள். வரும் காலங்களில் இது போன்ற தருணங்களை சமாளிப்பதற்கு நாங்கள் வேறு திட்டங்களை யோசிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

இப்போட்டி டிராவில் முடிந்தால் கூட 2 – 1 என்ற கணக்கில் 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது. ஆனால் 4-வது நாளில் பும்ராவைத் தவிர எஞ்சிய பவுலர்கள் சுமாராக பந்து வீசியதால் அந்த வாய்ப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க : முன்பு ரோஹித்தை கிண்டல் பண்ணீங்க. இப்போ விராட் கோலியையே கிண்டல் பண்றீங்களா? – சேவாக்கை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
இருப்பினும் கடைசி நாளில் வெற்றிக்காக போராடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள விக்ரம் ரத்தோர் மேலும் பேசியது பின்வருமாறு. “இன்னும் அவர்களுக்கு 119 ரன்கள் தேவை. கடைசி நாளில் ஆரம்பத்தில் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்தால் போட்டி நமது பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது” என்று கூறினார்.



