தமிழ்நாடு அணியின் சீனியர் வீரரான விஜய் சங்கர் கடந்த 2011-12 ஆம் ஆண்டு தமிழ்நாடு அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 70 போட்டிகளில் விளையாடி 11 சதம் உட்பட 45 ரன்கள் சராசரியுடன் 3702 ரன்கள் குவித்துள்ளார். அதுதவிர்த்து பந்துவீச்சிலும் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறும் விஜய் ஷங்கர் :
தற்போது 34 வயதான அவர் சர்வதேச போட்டிகளில் இடம்பெறாவிட்டாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து தமிழ்நாடு அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு தமிழ்நாடு அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 476 ரன்கள் குவித்து அசத்திய அவருக்கு அண்மை காலமாகவே வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரஞ்சி தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடாத அவர் சையத் முஷாக் அலி தொடரிலும் சில போட்டிகளை தவறவிட்டார்.
ஏனெனில் தற்போது 34 வயதான அவரை காட்டிலும் இளம் வீரர்களுக்கு தமிழ்நாடு அணி வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக புதிய முடிவை கையில் எடுத்துள்ள அவர் தமிழக கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறும் அவர் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதன்மூலம் 13 ஆண்டு காலமாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த அவர் தற்போது இங்கிருந்து திரிபுரா இடம்பெற முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் அதிரடியால் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்.. துவக்க வீரருக்கான இடம் யாருக்கு?
ஏற்கனவே தமிழக அணியின் அனுபவ வீரரான பாபா அபாரஜித் கடந்த ஆண்டு கேரளா அணிக்கு சென்ற வேளையில் தற்போது விஜய் ஷங்கர் திரிபுரா அணிக்கு செல்ல இருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்தவரை அவர் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



