2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியதோடு மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் பெற்றிருக்கிறார்.
சஞ்சு சாம்சன் அதிரடியால் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் :
இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரில் கட்டாயம் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்று தெரிகிறது. அதனால் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி வரும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் சுப்மன் கில் தான் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் கூறப்பட்டது.
இதன் காரணமாக ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வந்தன. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தொடர் வாய்ப்புகளை பெற்று வந்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கொச்சி அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் 51 பந்துகளில் 121 ரன்களை குவித்த அவர் மற்றொரு ஆட்டத்தில் திருச்சூர் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 89 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
இப்படி அடுத்தடுத்த ஆட்டங்களில் அதிரடியில் வெடித்து வாங்கும் அவர் நிச்சயம் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேவேளையில் சுப்மன் கில் அணிக்குள் வந்துள்ளதால் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரில் யார் கடினமான் பேட்ஸ்மேன்? மார்க் வுட் அளித்த பதில் – விவரம் இதோ
இதற்கான விடை ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது தான் தெரியும். ஆனால் தற்போது சஞ்சு சாம்சன் இருக்கும் பார்மில் அவரை துவக்க வீரராகவும், மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லை பயன்படுத்திக் கொண்டு திலக் வர்மாவை பிளேயிங் லெவனில் இருந்து கழட்டிவிடலாம் என்றும் சிலர் தங்களது யோசனைகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



