ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்த பெங்களூரு முதல் முறையாக 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது. அதே போல விராட் கோலி 18 வருடங்கள் காத்திருந்து கோப்பையை வென்றது பெங்களூரு அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. அந்த வெற்றிக்கு ஆர்சிபி அணியின் தோற்றுவிப்பாளர் மற்றும் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடகாவை சேர்ந்த அவர் வங்கிகளில் பல கோடி ரூபாய்களைக் கடனாக பெற்று மதுபான தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்மணி எனும் யூடியூப் சேனலில் அவர் ஆர்சிபி அணியை வாங்கிய பின்னணி விவரங்களை பகிர்ந்துள்ளார்.
மதுபான பிராண்ட் பெயரில்:
அந்த பேட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் என்ற தங்களுடைய அதிகம் விற்ற மதுபானத்தின் பிராண்டு பெயரைத் தான் ஆர்சிபி அணிக்கு சூட்டியதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். தங்களது மதுபானத்தின் பிராண்டுகளை மேலும் பிரபலமாக்கி விற்கும் நோக்கில் பெயரை சூடியதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெங்களூரு அணிக்காக 2008 ஐபிஎல் அணிகளின் ஏலத்தில் 112 மில்லியன் டாலர்கள் என்ற 2வது அதிகபட்ச தொகையை செலுத்தினேன்”
“ஏனெனில் நான் திறனை நம்பினேன். ஆர்சிபி என்பது களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் சிறந்த பிராண்டாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனாலேயே எங்களின் அதிகம் விற்பனையாகும் மதுபான பிராண்டுகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ்’ஸிக்கு தைரியமான அடையாளத்தைக் கொடுக்கும் நோக்கத்துடன் அணியின் பெயருடன் இணைத்தேன்”
ஆர்சிபி அணி:
“ஆர்சிபி ஒரு கிரிக்கெட் அணியை தாண்டி பெரிய பிராண்ட்டாக வேண்டும் என்று விரும்பினேன். அது லைஃப் ஸ்டைல் பிராண்ட்டாக இருக்க வேண்டும் என்று கருதினேன். போட்டி முடிந்ததும் பார்ட்டி, நடனமாடும் மங்கைகள், ரசிகர்களின் பிணைப்பு போன்ற அனைத்தும் பெங்களூரு அணியை ஆர்வமிக்க அணியாக உருவாக்கியது. கிங்பிஷர் மற்றும் ராயல் சேலஞ்ச் ஸ்பான்சர்களாக இருந்தன”
இதையும் படிங்க: 2008இல் விராட் கோலியை வாங்கியது ஏன்? ஆர்சிபி அணியை உருவாக்கியது பற்றி விஜய் மல்லையா
“அப்போது தான் உங்களால் ஒவ்வொரு போட்டியியையும் ஒரு நிகழ்வைப் போல் உருவாக்க முடியும். நாளடைவில் அந்த அணியை பெங்களூரு மக்கள் விரும்பினார்கள். தற்போது அந்த அணி பெங்களூரு நகரின் இதயத் துடிப்பாக மாறியுள்ளது” என்று கூறினார். தற்போது விஜய் மல்லையாவுக்கு பின் யூனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் என்ற மதுபான தனியார் நிறுவனம் ஆர்சிபி அணியின் உரிமையாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.



