இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த மும்பை அணி கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரண் சர்மா காயத்தால் விக்னேஷ் புத்தூருக்கு அடித்த ஜாக்பாட் :
கடைசியாக நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றிருந்த வேளையில் அந்த போட்டியில் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா போட்டியின் ஆரம்பத்திலேயே காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு ஏற்பட்ட காயம் பலமான காயம் என்பதால் ஒரு ஓவர் கூட அவரால் வீச முடியாமல் போனது. எனவே அவருக்கு பதிலாக பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக 3 ஓவர்களை வீசிய வில் ஜேக்ஸ் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி கரண் சர்மா காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறியதால் வில் ஜேக்ஸ் இந்த போட்டியில் பந்துவீச்சில் கை கொடுத்தார்.
ஆனால் அவருக்கு கையில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அடுத்து வரும் சில போட்டிகளை கரண் சர்மா தவற விட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக முதன்மை சுழற்பந்து வீச்சாளராக மீண்டும் இளம் வீரர் விக்னேஷ் புத்தூருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.
ஏனெனில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் அசத்தலாக செயல்பட்ட விக்னேஷ் புத்தூர் அந்த போட்டியிலேயே 3 விக்கெட்டை வீழ்த்தி சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருந்திருந்தார். இளம் வீரரான இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அனுபவ வீரரான கரண் ஷர்மா அணியில் இருப்பதால் அவருக்கு கடந்த சில போட்டிகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாடுக்கு அடுத்து மேலும் ஒரு வீரர் சி.எஸ்.கே அணியிலிருந்து விலகல் – மாற்றுவீரர் அறிவிப்பு
இந்நிலையில் கரண் சர்மாவிற்கு தற்போது ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்து வரும் சில போட்டிகளுக்கு விக்னேஷ் புத்தூரே முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை அடுத்தடுத்த சில போட்டிகளில் விக்னேஷ் புத்தூர் அசத்தும் பட்சத்தில் அவர் தொடர்ச்சியாக மும்பை அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



