இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடுவதற்காக 33 வயதாகும் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் கருண் நாயர் போராடி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய அவர் 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய அவரை இந்திய அணி கழற்றி விட்டது. ஆனால் அதன் பின் 9 வருடங்கள் கடந்தும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஆதங்கத்தை கொடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது. மறுபக்கம் மனம் தளராத கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
போராடும் நாயர்:
அதில் தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணிக்காக அவர் அட்டகாசமாக விளையாடி வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 முறை அவுட்டாகாமல் 5 சதங்கள் உட்பட 752* ரன்களை 752 என்ற அபார சராசரியில் குவித்துள்ளார். அந்த வகையில் சிறப்பாக விளையாடும் அவர் கேப்டனாக தன்னுடைய அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.
அதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளார்கள். குறிப்பாக அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. எனவே உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாகும்.
இங்கிலாந்து வாய்ப்பு:
இந்நிலையில் 33 வயதில் உழைத்து வரும் நாயருக்கு குறைந்தபட்சம் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது வரவேற்கத்தக்க விஷயம்”
இதையும் படிங்க: 5 சதங்கள் 752 ரன்ஸ்.. அந்த 2 விஷயம் இல்லாம இதெல்லாம் நடக்காது.. கருண் நாயருக்கு சச்சின் பாராட்டு
“33 வயதானாலும் உள்ளூர் ஒருநாள் தொடரில் கருண் நாயர் வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்காக அவர் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடுவதை பார்த்தால் நன்றாக இருக்கும். அது உள்ளூரில் தொடர்ந்து கனவுடன் விளையாடி வரும் மற்ற வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்க உதவியாக இருக்கும்” என்று கூறினார். இதே போல ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



