ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த அந்த அணி கடுமையான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை எதிர்கொண்டது. இருப்பினும் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடிய அந்த அணி முதல் முறையாக தங்களுடைய கனவு கோப்பையை வென்றது.
அதே போல விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் 17 வருடங்களாக காத்திருந்து பெற்ற வெற்றியை ஆர்சிபி அணி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினார்கள்.
ஆர்சிபி அணியால் கறை:
மறுபுறம் ஆர்சிபி அணி கோப்பையை வென்ற அடுத்த நாள் வெற்றியை தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் கொண்டாட முடிவெடுத்தது. அந்த செய்தியை அறிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் மைதானத்திற்கு வெளியே ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட அளவு ரசிகர்களுக்கு மட்டுமே மைதானத்திற்குள் அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன் காரணமாக ஒரு கட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் தாண்டி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 11 ரசிகர்கள் இயற்கை எய்தியது ஆர்சிபி அணியின் வரலாற்று வெற்றியையும் கொண்டாட்டத்தையும் சோகத்தில் முடித்தது. அது பற்றி விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் தலைமையிலான விசாரணை குழு, பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய கூட்டம் கூடுவதற்கு பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
பிரசாத் வாக்குறுதி:
அதனால் 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை பெங்களூரு மைதானத்திலிருந்து மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கர்நாடகா மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு பெங்களூருவை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தையும் அவர் இன்று துவங்கினார்.
இதையும் படிங்க: பிடிக்காத வீரர்களை தூக்கி எறியும் கம்பீர்.. அந்த நன்றி மறந்து ஷ்ரேயாஸை கழற்றி விட்ருக்கக் கூடாது.. ரமேஷ் விமர்சனம்
அப்போது தம்மை வாக்களித்து தேர்ந்தெடுத்தால் ஆர்சிபி அணியால் சின்னசாமி மைதானத்திற்கு ஏற்பட்ட கறைகளை துடைத்து மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த வழி வகுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். நெரிசலை தவிர்க்க கர்நாடக அரசு மைசூரில் புதிய மைதானம் கட்ட தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத் தடுத்து தற்போது 35000 இருக்கைகளைக் கொண்ட சின்னசாமி மைதானத்தை 50000ஆக அதிகரித்து சர்வதேச போட்டிகளை மீண்டும் நடத்த வழி வகுப்போம் என்று பிரசாத் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



