சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை அடித்து நொறுக்கி வெற்றி காண்பதும் அழுத்தமான ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருவதும் கடந்த 10 வருடங்களாக நீடித்து வருகிறது. இத்தனைக்கும் உலகின் இதர அணிகளை காட்டிலும் தரமான வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான அழுத்தத்தைக் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருந்தும் ஒரு ஐசிசி நாக் அவுட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது.
குறிப்பாக உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலும் இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து 2013 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளுக்கு தரமான வீரர்களை தேர்வு செய்யாதது, தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் போன்ற தரமான வீரர்களையும் சரியாக பயன்படுத்தாதது, கேஎல் ராகுல் போன்ற சொதப்பும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது போன்ற குளறுபடியான முடிவுகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
பணம், பவர் மட்டுமே இருக்கு:
அதைத் தவிர்த்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதும் மற்றொரு காரணமாகிறது. சரி காலம் கடந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நினைத்த இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்து கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்த தவறிய இளம் கிரிக்கெட் வீரர்கள் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா 2019க்குப்பின் 5 வருடங்களுக்கு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாத பலவீனமான வெஸ்ட் இண்டீஸிடம் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் 181 ரன்களுக்கு சுருண்டு தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே இந்தியாவின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அனுபவமற்ற இளம் தென்னாபிரிக்க அணியிடம் 2021 ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வி சந்தித்த இந்தியா கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் 2022 டிசம்பரில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2- 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததை சுட்டிக்காட்டும் அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போல நாம் பெயருக்காக கூட அதிரடியாக விளையாடுவதில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதை விட பணம், அதிகாரம் போன்ற அனைத்தையும் கொண்டிருக்கும் இந்திய அணியை சாம்பியனுக்கு நிகராக நாம் கொண்டாடினாலும் அவர்கள் உண்மையாகவே அவ்வாறு செயல்படுவதில்லை என்று தெரிவிக்கும் வெங்கடேஷ் பிரசாத் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து எஞ்சிய 2 வகையான கிரிக்கெட்டிலும் குறிப்பிட்ட காலங்களாகவே இந்தியா சுமாராக செயல்பட்டு வருகிறது”
“குறிப்பாக வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற நாம் கடந்த 2 டி20 உலக கோப்பைகளில் மோசமாக செயல்பட்டோம். அந்த வகையில் நாம் இங்கிலாந்து போல சுவாரசியமான அணியாகவோ ஆஸ்திரேலியா போல அடித்து நொறுக்கும் அணியாகவோ இல்லை. மேலும் பணமும் அதிகாரமும் இருந்த போதிலும் நாம் சாதாரண வெற்றிகளை கொண்டாட பழகி விட்டோம்”
இதையும் படிங்க:பணம், பவர் இருந்தும் உங்களால அதை மட்டும் செய்ய முடியல – இந்திய அணியை சரமாரியாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்
“ஆனால் நம்முடைய அணி சாம்பியன் அணிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஒவ்வொரு அணியை போலவே இங்கு இந்தியாவும் வெற்றிக்காகவே விளையாடுகிறது. ஆனால் அவர்களின் அணுகுமுறையும் சமீப காலங்களில் வெளிப்படுத்தும் குறைவான செயல் திறனுக்கு ஒரு காரணியாகும்” என்று கூறியுள்ளார்.