தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கௌஹாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ரன்கள் அடிப்படையில் தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனையைப் படைத்தது.
அத்துடன் 25 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு சுமாரான தேர்வுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அடிக்கடி மாற்றி பல்வேறு இடங்களில் களமிறங்கியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மோசமான தேர்வு:
எடுத்துக்காட்டாக 3வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகியோரை அவர் மாற்றி மாற்றி களமிறக்கியதை சொல்லலாம். இந்நிலையில் அதிகப்படியான ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறலாம் என்பது தவறான தேர்வு என்று அஜித் அகர்கரை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். அதே போல மங்கிய மூளைக் கொண்டவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல் ரவுண்டருக்கு முழுமையாக பவுலிங் செய்யும் வாய்ப்பைத் தராமல் இருப்பார் என்று கௌதம் கம்பீரையும் அவர் விமர்சித்துள்ளார்.
அடுத்ததாக இந்தியா 9 மாதங்கள் கழித்து தான் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அப்போது இந்த தவறுகள் மறக்கப்படாமல் திருத்தப்படும் என்று நம்புவதாகவும் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி செல்கிறது என்பது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது”
வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம்:
“ஆல் ரவுண்டர்கள் மீதான ஆசை மற்றும் அவர்களை முழுமையாக பவுலிங் செய்ய வைக்காதது மிகவும் மலுங்கிய மூளை எடுக்கக்கூடிய முடிவாகும். நமது தந்திரங்கள், திறன்கள், உடல்மொழி ஆகியவை மோசமாக இருக்கிறது. அதன் பயனாக நாம் சொந்த மண்ணில் முன்னோடியாக பார்க்க முடியாத 2 ஒயிட்வாஸ் தோல்விகளை சந்தித்துள்ளோம்”
இதையும் படிங்க: அன்று பும்ரா சொன்ன வார்த்தைக்கு தான்.. எங்க கோச் இந்தியாவை இழிவாக பேசிருப்பாரு.. பவுமா பதிலடி
“இந்த விஷயங்கள் 9 மாதங்கள் கழித்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் போது மறைந்து விடாது என்று நம்புகிறேன். இந்த எதிர்மறையான அணுகுமுறை மாற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த படுதோல்வியால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பாகிஸ்தானுக்கு கீழே 5வது இடத்தில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



