சொந்த வெறுப்பால் ரோஹித்தை கலாய்த்த நீங்க பேசலாமா? 11 வருட பழைய ட்வீட்டை தோண்டிய பிரசாத் – சோப்ராவுக்கு மாஸ் பதிலடி

Venkatesh prasad Aakash Chopra.jpeg
- Advertisement -

கர்நாடகாவை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று வருவது மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதன் உச்சகட்டமாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் 8 வருடங்களாக விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று ராகுலை வெளிப்படையாக தாக்கினார். மேலும் உங்களால் சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்த அவர் உங்களை விட அஸ்வின் சிறந்த துணை கேப்டன் என்றும் சாடினார்.

தோண்டிய பிரசாத்:
அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 20, 15, 1 என மீண்டும் ராகுல் சொதப்பலாக செயல்பட்டார். அப்போது வெளிநாட்டில் சிறந்த தொடக்க வீரராக இருக்கும் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்தார். அதனால் மேலும் அதிருப்தியடைந்த வெங்கடேஷ் பிரசாத் ராகுலை விட தவான், ராகனே போன்றவர்கள் வெளிநாட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதும் தொடர்ந்து சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டதை ஆதாரங்களுடன் பதிலடியாக கொடுத்தார்.

- Advertisement -

அப்போது இந்த விவகாரத்தில் தாமாக உள்ளே நுழைந்த மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சொந்த விருப்பு வெறுப்புக்காக தவறான புள்ளி விவரங்களுடன் ராகுலை விமர்சிக்காதீர்கள் என்று தனது கையில் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டு வம்புக்கு வந்தார். குறிப்பாக ட்விட்டரில் மட்டும் பதிவு போட்ட வெங்கடேஷ் பிரசாத்துக்கு யூடியூப் பக்கத்தில் 12 நிமிட வீடியோ போட்டு அவர் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் 2012இல் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு தமது அணியில் இடமில்லை ஆனால் ரகானேவுக்கு இடமுள்ளது என்று உண்மையாகவே ரோகித் சர்மா மீது சொந்த வெறுப்பை காட்டி ஆகாஷ் சோப்ரா போட்ட ட்வீட்டை தோண்டி எடுத்துள்ள வெங்கடேஷ் பிரசாத் உங்களைப் போல் நான் யாரையும் சொந்த விருப்பு வெறுப்புக்காக விமர்சிக்கவில்லை என்று மாஸ் பதிலடித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் மீண்டும் சரமாரியாக விமர்சித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“எனது நண்பர் ஆகாஷ் சோப்ரா, இன்று காலை யூடியூப்பில் ஒரு மோசமான வீடியோவை உருவாக்கி அதில் என்னை சொந்த வெறுப்புக்காக விமர்சிப்பவர் என்று கூறி வசதியாகவும் புத்திசாலித்தனமாகவும் தவறாக மேற்கோள் காட்டினார். மேலும் சொந்த மண்ணில் மயங் அகர்வாலின் 70 சராசரியை நீக்கிவிட்டு அவர் நம்பியவற்றுடன் ஒத்துப் போகாத பார்வைகளை ஏமாற்ற விரும்புகிறார். ஆனால் அவர் ஒரு சமயத்தில் ரோஹித்தை வெளியேற்ற விரும்பினார். அத்துடன் நான் எந்த வீரருக்கு எதிராகவும் சொந்த விருப்பு வெறுப்பை கொண்டிருக்கவில்லை. வேறு யாருக்காவது அது இருக்கலாம்”

“ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதிர் கருத்தை ட்விட்டரில் பேசக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவிப்பது வேடிக்கையானது. அத்துடன் இது போன்ற அவரது கருத்துக்களை ஒளிபரப்புவதன் வாயிலாக அவர் சிறந்த கேரியரை உருவாக்கியுள்ளார். ஆனால் ராகுல் உட்பட எந்த வீரருக்கு எதிராகவும் எனக்கு வெறுப்பு கிடையாது. எனது குரல் அனைத்தும் நியாயமற்ற தேர்வு மற்றும் அளவுகோலுக்கு எதிரானது. அது குல்தீப் யாதவ் அல்லது சர்ஃப்ராஸ்கான் என யாராக இருந்தாலும் நியாயத்தின் அடிப்படையில் நான் குரல் கொடுத்துள்ளேன்”

- Advertisement -

“இருப்பினும் அதை சொந்த வெறுப்பு என்று ஆகாஷ் சோப்ரா சொன்னது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் ரோகித் சர்மா 24 வயதில் 4 வருடங்களில் விளையாடி இருந்த போது ஆகாஷ் சோப்ராவின் கண்ணோட்டம் (பழைய ட்வீட்) இதுவாக இருந்தது. ஆனால் நான் மட்டும் 31 வயதாகும் ராகுல் 8 வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்கிறார். மேலும் தற்போது நடைபெறும் போட்டியில் சுமாராக செயல்படும் ஒருவரை விமர்சிக்க கூடாது என்று அவர் சொல்வது எனக்கு புரியவில்லை”

“இது வீரர்களின் செயல்திறனை பாதிக்காது. பெரும்பாலான வீரர்கள் போட்டிக்குப் பிறகும் பார்வைகளைப் படிக்க மாட்டார்கள் மற்றும் ஃபோன்களில் டெபாசிட் செய்யப்படுவதால் போட்டிக்கு இடையில் எந்த வீரரும் படிக்க முடியாது. ஆகாஷ் தனது யூடியூப் சேனலில் அவர் செய்யும் கடின உழைப்புக்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்”

இதையும் படிங்க: நீங்களே டூப்ளிகேட் டீம் தான், 10 மேட்ச் வெச்சாலும் இந்தியாவே வெல்லும் – ஆஸ்திரேலியாவை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

“ஆனால் அவரது கதைக்கு ஒத்துவராததால் வித்தியாசமான பார்வையை நிகழ்ச்சி நிரலாக அழைப்பது மோசமானது. எங்களுக்கிடையில் கசப்பு இல்லை. அவருடைய வீடியோ பொது களத்தில் இருப்பதால் எனது கருத்தை இங்கே வைக்க விரும்புகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார். தற்போது வெங்கடேஷ் பிரசாத் சுட்டிக்காட்டி அந்த ட்விட்டை ஆகாஷ் சோப்ரா டெலிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement