இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது சீசனானது நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் கொல்கத்தாவில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
என்னுடைய அடுத்தகட்ட பயணம் துவங்கி விட்டது : வெங்கடேஷ் ஐயர்
கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் புதிய கேப்டனாக அஜின்க்யா ரஹானேவும், துணைக் கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் பிரத்யேக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னிடம் நிச்சயம் திறமை இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
ஏதாவது ஒரு அதிசயத்தை நிகழ்த்தாமல் என்னுடைய கேரியர் முடிவுக்கு வந்தால் வருத்தப்படுவேன். தற்சமயத்தில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் முயற்சி செய்ய இருக்கிறேன்.
டி20, ஒருநாள் போட்டிகளில் இனி தொடர்ந்து இடம்பெறும் வகையில் என்னுடைய அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர உள்ளேன் என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். ஆனாலும் இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா, நிதீஷ் ரெட்டி போன்ற ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்களை தாண்டி வெங்கடேஷ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஹைதராபாத் 300 அடிச்சு சாதனை படைக்கும்.. இதை சமாளிச்சுட்டா அவர் 10 வருஷம் கலக்குவாரு.. விஹாரி பேட்டி
கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக ஆகிய வெங்கடேஷ் ஐயர் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றுவீரராக பார்க்கப்பட்ட வேளையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளோடு அவர் ஓரங்கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.