ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் அந்தத் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 300 ரன்களை அடித்த முதல் அணியாக வரலாற்றுச் சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக இந்திய வீரர் ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.
கடந்த வருடம் எதிரணிகளை காட்டுத்தனமாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் அசால்டாக 250 ரன்கள் அடித்தது. குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்த ஹைதெராபாத் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. எனவே கடந்த வருடமே 300 ரன்கள் நெருங்கிய ஹைதராபாத் இம்முறை அதைத் தொடும் என்று விகாரி கணித்துள்ளார்.
விஹாரி கணிப்பு:
மேலும் தற்போது நித்திஷ் ரெட்டி மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே அந்த எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் சமாளித்து இந்த வருடமும் பெரிய ரன்கள் குவித்து விட்டால் அடுத்த 10 வருடங்களுக்கு நிதிஷ் ரெட்டி அசத்துவார் என்று விகாரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் உள்ளனர்”
“தற்போது மூன்றாவது இடத்தில் இசான் கிசான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களைத் தொடர்ந்து ஹென்றிச் க்ளாஸென், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இருப்பதால் ஹைதராபாத் தங்களுடைய பேட்டிங் வரிசையை இன்னும் அதிகமாக வலுப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அவர்களால் 300 ரன்கள் தொட முடியும். நல்ல பேட்டிங் பிட்ச்சில் நல்ல பௌண்டரிகளை கொண்ட மைதானத்தில் அது சாத்தியமாகும்”
நிதிஷ் ரெட்டி வாய்ப்பு:
“அதிரடியாக விளையாடுவதில் ஹைதராபாத் புதிய வரைமுறைகளை நிர்ணயித்துள்ளது. அதற்காக அவர்களுடைய கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் ஆகியோருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கான ஆதரவைக் கொடுக்கின்றனர். இந்த வருடமும் அவர்கள் அதை தொடர்வார்கள் என்று நம்புகிறேன். நிதிஷ் ரெட்டி கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: கலை நிகழ்ச்சிகளை பாழாக்கி.. கேகேஆர் – ஆர்சிபியுடன் விளையாட வரும் மழை? வெதர் ரிப்போர்ட்
“அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மெல்போர்ன் போட்டியில் சதத்தை அடித்தார். டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் மீது தற்போது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. 21 வயது மட்டுமே நிரம்பிய அவர் எப்படி தனது அழுத்தத்தை சமாளிக்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஒருவேளை இந்த வருடமும் அதை சமாளித்து ரன்கள் குவித்து விட்டால் அடுத்த 10 வருடத்திற்கு அவரிடம் தேக்கம் இருக்காது” என்று கூறினார்.



