இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் 90 வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த ரஞ்சி கோப்பை தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா ஆகிய அணிகள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய விதர்பா அணி 379 ரன்களை குவித்தது.
விதர்பா அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை :
அதேவேளையில் கேரளா அணி தங்களது முதல் இன்னிங்சில் 342 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 37 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய விதர்பா அணி 375 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியின் ஐந்தாம் நாள் அன்று இரு அணிகள் கேப்டனும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.
இதன் காரணமாக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த விதர்பா அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விதர்பா அணியை சேர்ந்த டேனிஷ் மலேவரும், தொடர் நாயகனாக ஹார்ஷ் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரை வென்ற விதர்பா அணிக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வகையில் அம்மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு மூன்று கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹார்ஷ் துபேவுக்கு 25 லட்சமும், அதிக ரன்களை குவித்த யாஷ் ரத்தோடு மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கு தலா 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் உஸ்மான் கனிக்கு 15 லட்சமும், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா 5 இலட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அந்த ஒரு பவுலரை சமாளிச்சுட்டா போதும்.. ஆஸிக்கு எதிராக கோலி சதமடிச்சு ஜெயிக்க வைப்பாரு.. ராயுடு ஆதரவு
ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படும் வேளையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட கருண் நாயருக்கு எதிர்வரும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.



