ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 சாம்பியன்ஸ் டிராபியின் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் 2002, 2013, 2025* என 3 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்ற முதல் கிரிக்கெட் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
அந்த வெற்றிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அதில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவருக்கு 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஜீரோ டூ ஹீரோ:
அந்த வாய்ப்பில் கணிசமான போட்டிகளில் விளையாடியதும் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பும் வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் ஒரு விக்கெட் கூட எடுக்காத அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக அந்தத் தொடருடன் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடிய அவர் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதனால் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் அவரை இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் அபாரமாக செயல்பட்ட வருண் 2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழகத்துக்காக 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
துபாயில் சரித்திரம்:
அதனால் கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெறாத வருண் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 5 விக்கெட் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் செமி ஃபைனலில் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே காலி செய்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இதையும் படிங்க: 2017 வேதனையை மறக்கல.. என்னை விட இந்தியாவுக்காக அவர் நல்லா ஃபினிஷிங் பண்ணிட்டாரு.. பாண்டியா பேட்டி
மொத்தமாக இந்தத் தொடரில் 9 விக்கெட்டுகள் எடுத்த வருண் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ஷமியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் 2021இல் ஜீரோவாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட வருண் சக்கரவர்த்தி இன்று அதே துபாயில் ஹீரோவாக சாதனை படைத்து நாட்டுக்காக கோப்பையை வெல்ல உதவியுள்ளார். அதனால் முயன்றால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் தமிழகத்தின் தங்க மகன் சக்கரவர்த்தி இந்தியாவுடன் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார்.



