இந்தியாவில் விஜய் ஹசாரே உள்ளூர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அதில் வதோதராவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 47.3 ஓவரில் 267 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஜித் தோமர் சதத்தை அடித்து 111 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 9 ஓவரில் 52 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவர் கடந்த வங்கதேச டி20 தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
சக்ரவர்த்தி அபாரம்:
அதில் நன்றாக பந்து வீசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய வருண் சக்ரவர்த்தி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரிலும் அபாரமாக பவுலிங் செய்து வெற்றியில் பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது இப்போட்டி மட்டுமின்றி தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி மொத்தம் 18 விக்கெட் எடுத்துள்ளதால் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
அந்த வாய்ப்பில் அசத்தினால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அவருடன் கேப்டன் சாய் கிஷோர் மற்றும் சந்திப் வாரியர் ஆகியோரும் இப்போட்டியில் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக 268 ரன்களை துரத்திய தமிழக அணிக்கு நாராயண் ஜெகதீசன் அதிரடியாக விளையாடினார்.
ஜெகதீசன் மிரட்டல்:
குறிப்பாக 2வது ஓவரை வீசிய அமன் சிங் முதல் பந்தை ஒயிட் போட்டு பவுண்டரி கொடுத்தார். ஆனால் அடுத்த 6 பந்துகளில் 4, 4, 4, 4, 4, 4 என நாலாபுறமும் அடுத்தடுத்த 6 பவுண்டரிகளை பறக்க விட்ட ஜெகதீசன் ஒரே ஓவரில் 24 ரன்கள் குவித்து மிரட்டினார். இருப்பினும் மறுபுறம் துஷார் ரஹீஜா 11, பூபதி குமார் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபிக்கு ரிஷப் பண்ட் வேண்டாம்.. அந்த 2 பேர் தான் சரியான கீப்பர்.. சஞ்சய் பாங்கார், மஞ்ரேக்கர்
இந்தப் பக்கம் தொடர்ந்து போராடிய ஜெகதீசன் 10 பவுண்டரியுடன் அரை சதத்தை அடித்து 65 ரன்கள் குவித்து டெவலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் பாபா இந்திரஜித் 37, விஜய் சங்கர் 49, முகமத் அலி 34 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 47.1 ஓவரில் 248க்கு தமிழ்நாடு அணியை சுருட்டிய ராஜஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக அமன் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.



