
இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு 135 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.
அவரை விட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பவுலிங் செய்து 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 7.66 என்ற எக்கனாமியில் எடுத்தார். அந்த வகையில் தொடர் முழுவதும் வெற்றியில் பங்காற்றிய அவர் தொடர்நாயகன் விருதை வென்றார். மேலும் ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற தொடரில் வருண் 12 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. தற்போது அவர் தனது சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. வருண் சக்ரவர்த்தி: 14, இங்கிலாந்துக்கு எதிராக, 2025*
2. வருண் சக்ரவர்த்தி: 12, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2024
3.ரவிச்சந்திரன் அஸ்வின்: 9, இலங்கைக்கு எதிராக, 2016
4. ரவி பிஸ்னோய்: 9, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023
அந்த வகையில் கடைசியாக இந்தியா விளையாடிய தென்னாப்பிரிக்க தொடரில் 12 விக்கெட்டுகள் எடுத்த அவர் தற்போதைய தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக அடுத்தடுத்த சர்வதேச இருதரப்பு டி20 தொடர்களில் தலா 10க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் வருண் படைத்துள்ளார். இதற்கு முன் அஸ்வின் உள்ளிட்ட வேறு எந்த வீரர்களும் இந்த சாதனையைப் படைத்ததில்லை.
2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் தனது முதல் 6 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து போராடி வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவரை கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: இப்போ தான் செருப்பு இல்லாம வாழ்த்திருக்காரு.. 3 வருடமாக பேட்டிங்கை மெருகேற்றிய யுவி பற்றி அபிஷேக்
அப்போதிலிருந்து அசத்தும் வருண் கடைசி 9 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் எடுத்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் அடுத்த டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட அவரை அடுத்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தேர்ந்தெடுக்காதது குறிப்பிடத்தக்கது.