இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த ஊரில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
மேலும் 13 சிக்சர்கள் அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக 2 சாதனைகளை படைத்தார். அப்போட்டியின் முடிவில் தம்முடைய குரு யுவ்ராஜ் சிங் சொன்னது போல் 15 ஓவர் வரை விளையாடியதாக அபிஷேக் தெரிவித்தார். அதனால் யுவ்ராஜ் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
செருப்பு இல்லாமல்:
அவருக்கு யுவ்ராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ள பாராட்டு பின்வருமாறு. “நன்றாக விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. உங்களிடம் இந்த ஆட்டத்தை தான் நான் பார்க்க விரும்பினேன். உங்களுடைய சதத்திற்காக பெருமையடைகிறேன்” என்று பாராட்டினார். அது பற்றி செய்தியாளர்கள் அபிஷேக் ஷர்மாவிடம் கேட்டார்கள்.
அதற்கு இப்போது தான் முதல் முறையாக தம்முடைய குரு யுவ்ராஜ் செருப்பு இல்லாமல் தம்மை பாராட்டியதாக கலகலப்பாக கூறினார். அதாவது இதற்கு முன் அபிஷேக் அரை சதமடித்தும் சதத்தை நெருங்காத போட்டிகளில் யுவ்ராஜ் ட்விட்டரில் செருப்பு எமோஜியை பயன்படுத்தி அக்கறையுடன் திட்டும் வகையில் உரிமையுடன் வாழ்த்தினார். ஆனால் இம்முறை அந்தத் தவறை செய்யாமல் விளையாடி சதத்தை அடித்ததால் யுவ்ராஜ் செருப்பு எமோஜியை பயன்படுத்தாமல் வாழ்த்தியுள்ளார்.
3 வருட கோச்சிங்:
இது பற்றி அபிஷேக் பேசியது பின்வருமாறு. “செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவ்ராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார். அதற்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். 3 வருடத்திற்கு முன்பாக அவருடன் பயிற்சிகளை துவங்கிய போது ஒரு வீரராக உங்கள் மீது எப்போதும் சந்தேகம் இருப்பது இயற்கை என்று கூறினார்”
இதையும் படிங்க: எவ்ளோ பாத்திருக்கேன்.. ஆனா இந்தமாதிரி பாக்கல அபிஷேக் சர்மாவை பாராட்டிய – ஜாஸ் பட்லர் பேட்டி
“இருப்பினும் உங்களால் இந்தியாவுக்காக விளையாடி நன்றாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று என்னிடம் சொன்னார். லாக் டவுன் சமயங்களில் குறுகிய காலத்தை பார்க்காதீர்கள் நீண்ட கால திட்டத்திற்காக உங்களை நான் தயார்படுத்துகிறேன் என்று யுவ்ராஜ் என்னிடம் சொன்னார். அன்று அவர் கொடுத்த பயிற்சிகள் இன்று ஒன்றாக சேர்ந்து எனக்கு வருவதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.



