ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் மிகவும் போராடி 251-7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு வில் எங் 15, கேன் வில்லியம்சன் 11, டாம் லாதம் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 37 (29) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அசத்தல் பவுலிங்:
மிடில் ஆர்டரில் டேரில் மிட்சேல் 63 ரன்கள் குவித்து அசத்தினார். கிளன் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக 53 (40) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்து நல்ல பவுலிங் செய்து அசத்தினார்கள்.
இந்நிலையில் கடந்தப் போட்டியை விட இந்தப் போட்டியில் துபாய் பிட்ச் நன்றாக இருப்பதாக தமிழக வீரர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அது பெரியளவில் சுழலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதில் ஸ்டம்ப் லைனில் வீசி நன்றாக பவுலிங் செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கும் அவர் பேட்டிங்கில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் அசத்தினால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வெல்லும்:
இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு. “பிட்ச் கடந்தப் போட்டியை விட நன்றாக இருக்கிறது. அது பந்துகள் அதிகமாக செல்லவில்லை. அதில் ஸ்டம்ப் லைனில் பவுலிங் செய்து பேட்ஸ்மேன்கள் சில தவறு செய்யும் வரை காத்திருந்தேன். பவர் பிளே மட்டுமின்றி டெத் ஓவர்களிலும் பௌலிங் செய்வதை நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: 251 ரன்ஸ்.. 38 ஓவர்ஸ்.. 2வது சாதனை சுழலை வைத்து நியூஸிலாந்தை மடக்கிய இந்தியா.. கோப்பையை தூக்குமா?
“அது எனக்கு அதிக சவாலையும் அதிக விக்கெட்டுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கிறது. குல்தீப், ஜடேஜா பாய், அக்சர் ஆகியோருடன் நான் பேசினேன். அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தி இந்திய அணியில் இணைவது புதிதாக நன்றாக இருக்கிறது. நாங்கள் துவக்கத்திலேயே நன்றாக பேட்டிங் செய்தால் இந்த இலக்கு எட்டக்கூடியது” என்று கூறினார்.



