251 ரன்ஸ்.. 38 ஓவர்ஸ்.. 2வது சாதனை சுழலை வைத்து நியூஸிலாந்தை மடக்கிய இந்தியா.. கோப்பையை தூக்குமா?

- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது. அதில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த வில் எங் 15 ரன்களில் வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார்.

அவருடன் எதிர்புறம் அதிரடியாக 37 (29) ரன்கள் குவித்து சவால் கொடுத்த ரச்சின் ரவீந்த்ராவை தனது மாயாஜால சுழலால் குல்தீப் யாதவ் போல்ட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சனையும் 11 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 75-3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாறியது.

- Advertisement -

இந்தியா நல்ல பவுலிங்:

அப்போது டேரில் மிட்சேல் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த டாம் லாதமை 14 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பெவிலியன் அனுப்பி வைத்தார். அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸ் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி 34 ரன்கள் எடுத்த போது வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்ட்டானார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய டேரில் மிட்சேல் அரை சதத்தை அடித்து டெத் ஓவர்களில் அதிரடியை துவக்க முயற்சித்த போது 63 ரன்களில் ஷமி வேகத்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக வந்த கேப்டன் சான்ட்னர் 8 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மைக்கேல் பிரேஸ்வல் மிகவும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53* (41) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:

அதனால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் போராடி 251-7 என்ற நல்ல ஸ்கோரை அடித்தது. குறிப்பாக கடைசி 5 ஓவரில் மட்டும் 50 ரன்கள் அடித்து நியூசிலாந்து சரிவிலிருந்து மீண்டு வந்தது. மறுபுறம் முடிந்தளவுக்கு நன்றாகவே பௌலிங் செய்த இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: நியூஸிலாந்து ஃபைனலிலும் வராத அதிர்ஷ்டம்.. லாராவின் 26 வருட மோசமான சாதனையை ரோஹித் சமன்.. இந்தியா வெல்லுமா?

இந்திய அணி தங்களுடைய பலமான சுழல் பவுலர்களை வைத்து 38 ஓவர்களை வீசி முடிந்தளவுக்கு நியூசிலாந்தை கட்டுப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 2வது அதிக ஸ்பின் ஓவர்களை வீசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2002 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை 39.4 ஓவர்கள் வீசி முதல் இடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து சவாலான துபாய் ஆடுகளத்தில் 252 ரன்களை துரத்தி இந்தியா கோப்பையை வெல்லும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement