ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன்களை 49 ஓவரில் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 76, ஸ்ரேயாஸ் ஐயர் 48, ராகுல் 34* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்கள்.
பவுலிங் துறையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். மறுபுறம் நியூஸிலாந்து அணி போராடித் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா தொடர்நாயகன் விருதை வென்றார்.
தகுதியான தொடர்நாயகன்:
இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை அல்லது தாமாக இருந்தால் வருண் சக்கரவர்த்திக்கு தான் தொடர்நாயகன் விருதை கொடுத்திருப்பேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஃபைனலில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். மேலும் அனைத்து போட்டிகளிலும் விளையாடாத வருண் வெறும் 3 போட்டிகளிலேயே 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எது சொன்னாலும் நடந்திருந்தாலும் என்னுடைய பார்வையில் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன். இத்தனைக்கும் அவர் தொடர் முழுவதும் விளையாடவில்லை. அந்தளவுக்கு அவர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒருவேளை அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி சென்றிருக்கும்”
அஸ்வின் பாராட்டு:
“ஒருவேளை நான் அந்த விருதின் தேர்வாளராக இருந்தால் அதை வருணிடம் கொடுத்திருப்பேன். அவர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி உள்ளார். கிளன் பிலிப்ஸ் விக்கெட்டை அவர் எப்படி எடுத்தார் என்பதைப் பாருங்கள். பிலிப்ஸ் தன்னுடைய ஸ்டம்ப்புகளை முழுமையாக மறைத்துக் கொண்டார். அதை உடைப்பதற்காக வெள்ளைக்கோட்டில் அகலமாக சென்று வருண் கூக்லி பந்தை வீசினார்”
இதையும் படிங்க: இந்தியாவின் சைலன்ட் ஹீரோவை மறக்காதீங்க.. எங்களை விட பேட்டிங்கில் அவரோட பங்கு அபாரம்.. ரோஹித் பாராட்டு
“என்னுடைய பார்வையில் வருண் தான் தொடர்நாயகன். அவர் அந்த விருதைப் பெறுவதற்கு தகுதியானவர்” எனக் கூறினார். இது போக செமி ஃபைனலில் சரியான நேரத்தில் டிராவிஸ் ஹெட்டை மட்டும் வருண் அவுட்டாக்காமல் போயிருந்தால் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றிருக்குமா என்பதே பெரிய சந்தேகமாகும். எனவே இந்தத் தொடரில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த வருண் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.



