இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக் நகரில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் கடந்த போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார்.
வருண் சக்ரவர்த்தி ஒருநாள் போட்டியிலும் அசத்தல் :
அதேபோன்று மற்றொரு முக்கிய மாற்றமாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவருக்கு 33 வயதான நிலையிலும் அவரை நம்பி இந்த அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக வயதில் அறிமுகமான இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் வருண் சக்கரவர்த்தி நிகழ்த்தி இருந்தார். டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசும் அவர் ஒரு நாள் போட்டிகளில் எவ்வாறு செயல்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
இவ்வேளையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான ஃபில் சால்டை 26 ரன்களில் வெளியேற்றி அசத்தியுள்ளார்.
டி20 போட்டிகளை பொருத்தவரை நான்கு ஓவர்கள் மட்டுமே வீசவேண்டும் என்பதனால் அது அவருக்கு எளிதான ஃபார்மேட்டாக இருந்தது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளை அவர் எவ்வாறு தகவமைத்து செயல்பட போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய போட்டியில் இதுவரை 6 ஓவர்களை வீசியுள்ள அவர் 26 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட என்ன காரணம்? – விவரம் இதோ
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியானது இதுவரை 23 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக ஹாரி புரூக் 18 ரன்களுடனும், ஜோ ரூட் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.



