
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் முதல் செமி ஃபைனல் துவங்கியது. அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. கடைசியாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மோதிய போது இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
அதற்கு டிராவிஸ் ஹெட் சதத்தை அடித்து முக்கியப் பங்காற்றியதை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அதற்கு முன்பாகவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். அது போக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் 2 சதங்கள் அடித்த ஹெட் 10 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானார்.
அதனால் இந்தப் போட்டியில் இந்தியாவை அவர் என்ன செய்யப் போகிறாரோ? என்று ரசிகர்கள் கலக்கத்துடன் இருந்தனர். அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிர்பார்த்ததை போலவே ஹெட் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்க தொடங்கினார்.
குறிப்பாக 0 ரன்னில் அவர் கொடுத்த கேட்ச்சை பந்தை வீசிய ஷமி பிடிக்க தவறினார். அதற்கு தண்டிக்கும் வகையில் ஷமிக்கு எதிராக ஹாட்ரிக் பௌண்டரிகளை பறக்க விட்ட ஹெட் வேட்டையைத் துவங்கியதால் இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அதைத் தடுப்பதற்காக முதலில் குல்தீப்பை கேப்டன் ரோஹித் கொண்டு வந்தார். அவருக்கு எதிராகவும் ஹெட் சிக்ஸர் பறக்க விட்டார்.
அடுத்ததாக ரோஹித் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு 8வது ஓவரை கொடுத்தார். அதில் முதல் பந்தில் ஸ்மித் சிங்கிள் எடுத்த நிலையில் 2வது பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்த ஹெட் 39 (33) ரன்களில் சுப்மன் கில்லின் அபார கேட்ச்சால் அவுட்டானார். அதை இந்திய வீரர்கள் கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர்.
இதையும் படிங்க: அரையிறுதி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன?
இதற்கு முன் பும்ரா, ஷமி உள்ளிட்ட வேறு இந்திய பவுலர்களாலும் ஹெட்டை சொற்ப ரன்னில் அவுட்டாக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையில் தனது கேரியரில் முதல் முறையாக ஹெட்டுக்கு எதிராக வீசிய முதல் பந்திலேயே அவரை வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கி அபாரத்தை நிகழ்த்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் ஹெட்டை அவுட்டாக்கிய முதல் ஸ்பின்னர் என்ற சாதனையையும் வருண் படைத்துள்ளார். உலகில் வேறு எந்த ஸ்பின்னரும் முதல் 10 ஓவருக்குள் ஹெட்டை அவுட்டாக்கியதில்லை.