IPL 2023 : சுனில் நரேனின் 11 வருட தனித்துவ சாதனையை தகர்த்த வருண் சக்கரவர்த்தி – இரட்டை ஐபிஎல் வரலாற்று சாதனை

Varun Chakravarthy Abdul Samad
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 171/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 (35) ரன்களும் நித்திஷ் ராணா 42 (31) ரன்களும் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் மற்றும் மார்க்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 172 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 9 (10) ரன்களில் அவுட்டான நிலையில் மயங் அகர்வால் 18 (11) ராகுல் திரிபாதி 20 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து குறைவான ரன்களில் ஆட்டமிழக்க ஹரி ப்ரூக் டக் அவுட்டாகி நடையை கட்டினார். அதனால் 54/4 என தடுமாறிய ஹைதராபாத்தை கேப்டன் ஐடன் மார்க்ரமுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 70 பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஹென்றிச் க்ளாஸென் 36 (20) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

இரட்டை சாதனை:
இருப்பினும் அந்த சமயத்தில் கடைசி 30 பந்துகளில் ஹைதராபாத் வெற்றிக்கு 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதுடன் 5 விக்கெட் கைவசம் இருந்ததாலும் மார்க்ரம் – அப்துல் சமத் என 2 அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்ததாலும் கொல்கத்தாவின் தோல்வி உறுதியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் பேட்ஸ்மேன்கள் கருணை காட்டாமல் அடித்து நொறுக்கும் டெத் ஓவர்களில் மாயாஜாலம் நிகழ்த்திய தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி 16வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டும் கொடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் வைபப் அரோரா வீசிய 17வது ஓவரில் மார்க்ரம் 41 (40) ரன்களில் அவுட்டான நிலையில் 18வது வீசிய வருண் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது அப்துல் சமதை 21 (18) ரன்களில் அவுட்டாக்கி 3 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் கிடைக்காது என்று எதிர்பார்த்த வெற்றியை தனது மாயாஜாலத்தால் கொல்கத்தாவின் பக்கம் சாய்த்த காரணத்தால் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருடன் ஷார்துல் தாகூர், வைபவ் அரோரா ஆகியோரும் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.

- Advertisement -

1. அப்படி கடைசி ஓவரில் வெறும் 9 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 10க்கும் குறைவான ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய முதல் ஸ்பின்னர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அமித் மிஸ்ரா, ரசித் கான் முதல் அனில் கும்ப்ளே ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய வேறு எந்த ஸ்பின்னரும் கடைசி ஓவரில் 10க்கும் குறைவான ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதில்லை.

2. அதை விட இப்போட்டியில் 18வது ஓவரில் அவர் கொடுத்த 5 ரன்களில் 3 லெக் பைஸ் ஆகும். அதே போல 20வது ஓவரில் அவர் கொடுத்த 3 ரன்களில் 1 லெக் பைஸ் ஆகும். அதாவது 18, 20 ஆகிய ஓவர்களில் வருண் தலா 2 ரன்கள் வீதம் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த லெக் பைஸ் ரன்கள் (3, 1) பவுலர் கணக்கில் அல்லாமல் உதிரிகள் (எஸ்ட்ராஸ்) கணக்கில் சேரும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் இலக்கை கட்டுப்படுத்தும் போது 18, 20 ஆகிய ஓவர்களில் மிகவும் குறைவான ரன்களை கொடுத்த பவுலர் என்ற சுனில் நரேன் சாதனையை உடைத்துள்ள வருண் சக்கரவர்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. வருண் சக்கரவர்த்தி : 4 ரன்கள், ஹைதராபாத்துக்கு எதிராக, 2023*
2. சுனில் நரேன் : 6 ரன்கள், புனே வாரியர்ஸ்க்கு எதிராக, 2012
3. கமலேஷ் நாகர்கோட்டி : 6 ரன்கள், ராஜஸ்தானுக்கு எதிராக, 2020

இதையும் படிங்க:KKR vs SRH : 20 ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீச இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – நிதீஷ் ராணா பேட்டி

முன்னதாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக 2021 டி20 உலக கோப்பையில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட போராடி வருவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement