கடினமாக உழைத்து மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பேன் – தமிழக வீரர் உறுதியான நம்பிக்கை

Varun-1
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் சார்பில் சீனியர் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கடினமாக உழைத்து கடுமையான விமர்சனங்களையும் சவால்களையும் கடந்து தங்களுக்கென்று இடத்தை பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இடம் பிடித்திருந்த சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அத்தொடருடன் இந்திய அணியிலிருந்து காணாமல் போயுள்ளார் என்றே கூறலாம்.

varun

- Advertisement -

டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் தொடரில் அசத்திய அவருடைய திறமையை உணர்ந்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் கேப்டன் என்ற முறையில் பரிந்துரைத்து நெட் பந்துவீச்சாளராக கொண்டு வந்து பின்னர் ஏலத்தில் வாங்க வைத்தார். அதில் ஐபிஎல் 2020 தொடரில் அற்புதமாக பந்து வீசிய அவர் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 6.84 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அதைவிட 2021 சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 6.58 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் உலக கோப்பையில் தேர்வானார்.

கம்பேக் முயற்சி:
மேலும் அஜந்தா மென்டிஸ் போல மாயாஜால சுழல் பந்து வீச்சாளராக பேசப்பட்ட அவர் அற்புதமாக செயல்படுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் 3 போட்டிகளில் வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்ட அவர் அத்தோடு கழற்றி விடப்பட்டார். அவருடைய தோல்விக்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக் என்றே கூறலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் அடித்தால் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் இருந்து தமிழில் ஆலோசனை வழங்கிய அவர் உலகக்கோப்பையில் இல்லாததால் சாவி இல்லாத பொம்மை போல வருண் சக்ரவர்த்தி செயல்பட்டார்.

Varun-chakravarthy

மேலும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் இந்த வருடம் 8 கோடிக்கு கொல்கத்தாவில் தக்கவைக்கப்பட்ட அவர் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்கு விளையாட சென்று விட்டதால் மீண்டும் சாவி இல்லாத பொம்மையைப் போல 11 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்டுகளை எடுத்து மோசமாக செயல்பட்டதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இதனால் தன்னிச்சையாக செயல்படும் யுத்தியை கற்றுக்கொள்ளவேண்டிய அவர் விரைவில் நடைபெறும் சயீத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சயீத் முஷ்டாக் அலி கோப்பை எனக்கு மிகவும் முக்கியமான தொடராகும். அதில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் தேர்வுக்குழு கதவை தட்டுவேன் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அதனால் கடவுளின் அருளுடன் மீண்டும் நான் வாய்ப்பு பெறுவேனா என்று பார்ப்போம். அதற்கு சயீத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் அடுத்த ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியம் என்பது எனக்கு தெரியும். இந்த 2 தொடர்களிலும் நான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம்”

Varun

“மேலும் அடிப்படையில் நான் பல்வேறு வித்தியாசங்களை கொண்டுள்ள லெக் ஸ்பின்னர் ஆவேன். இதர வீரர்களை விட நான் சற்று அதிகப்படியான வேகத்தில் வீசுவேன். அதற்காக எப்போதும் நான் என்னை மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் என்று சொன்னதில்லை. அந்த பெயரை எனக்கு ஊடகங்கள் தான் ஏற்படுத்தின. அந்த வகையில் எனது பந்து வீச்சில் நிறைய வித்தியாசங்களை கொண்டிருக்கும் நான் எப்போதும் என்னை மாயாஜால ஸ்பின்னர் என்று கூறியதில்லை” எனக்கூறினார்.

இருப்பினும் போட்டி மிகுந்த இந்திய அணியில் ரவி பிஷ்னோய் போன்ற இளம் சுழல்பந்து வீச்சாளர்கள் நல்ல பார்மில் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் 31 வயதை கடந்துவிட்ட இவர் ஏற்கனவே கொடுத்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து போராடினால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக் போல வாய்ப்பு தாமாகவே தேடிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement