சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் டி20 போட்டிகளுக்கான முழு தரவரிசை பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான வருண் சக்கரவர்த்தி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
பும்ரா, ரவி பிஷ்னாய்க்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக வருண் சக்ரவர்த்தி அசத்தல் :
கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த தொடரின் போது அவரது மோசமான செயல்பாடு காரணமாக உடனடியாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட ஆரம்பித்த வருண் சக்கரவர்த்தி 2023, 2024 ஐபிஎல் தொடர்களில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
அதன் பலனாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் வந்ததும் மீண்டும் இந்திய டி20 அணிக்குள் கம்பேக் கொடுத்தார். அப்படி தான் மீண்டும் இந்திய அணியில் இணைந்ததில் இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தற்போது இந்திய டி20 அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். அதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய ஒருநாள் அணியிலும் இடம் பிடித்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அவரே செயல்பட இருக்கிறார். இந்நிலையில் புதன்கிழமை வெளியான ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது டி20 போட்டிகளின் பந்துச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பாக பும்ரா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரே முதலிடம் பிடித்திருந்த வேளையில் மூன்றாவது இந்திய வீரராக வருண் சக்கரவர்த்தி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் பும்ராவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவது உறுதி.. பயிற்சியில் ஏற்பட்ட நிகழ்வு – விவரம் இதோ
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



