
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் 4 போட்டிகளில் விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த கையோடு தனது பந்துவீச்சு திட்டம் குறித்து பேசியிருந்த வருண் சக்கரவர்த்தி கூறியதாவது : இந்த டி20 தொடரிலேயே கடைசி போட்டி தான் மிகவும் சிறப்பான போட்டியாக இருந்தது. இந்த தொடர் முழுவதுமே என்னுடைய செயல்பாட்டை நான் ரசித்து விளையாடியிருந்தேன்.
இந்திய அணியில் என்னுடைய ரோலே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அதற்காக நான் பந்து என் கையில் வந்தாலே பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்து விக்கெட் எடுக்கும் நோக்கிலேயே பந்து வீசுகிறேன். உண்மையில் எனக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் கம்பீர் ஆகியோரிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கிறது.
அதன் காரணமாகவே என்னால் இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிகிறது. இந்த தொடரில் நான் எவ்வாறு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினேனோ அதேபோன்று இனிவரும் தொடர்களிலும் என்னுடைய பந்துவீச்சில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் சிறப்பாக பந்துவீசுவேன்.
இதையும் படிங்க : 10 இடங்கள் முன்னேறி இலங்கை வீரருடன் 18 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ
அதேபோன்று எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் முழுமையாக வழங்குவேன் என்றும் வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.