தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்த இந்திய அணி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்கா அணியை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனியாக நின்று கலக்கிய வருண் சக்கரவர்த்தி :
மேலும் முதல் போட்டியில் விளையாடியது போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ரன்களை விட்டுக் கொடுத்து வந்த இந்திய அணி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்னாப்ரிக்கா அணி 213 ரன்கள் வரை குவிக்க உதவியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 54 ரன்களையும், பும்ரா 42 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
இப்படி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களே ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுத்த வேளையில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அக்சர் பட்டேல், ஹார்டிக் பாண்டியா, ஷிவம் துபே என பந்துவீசிய அனைவரும் கிட்டத்தட்ட 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.
ஆனால் வருண் சக்கரவர்த்தி மட்டும் 4 ஓவர்கள் பந்துவீசி எந்த ஒரு உதிரியையும் வழங்காமல் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அவர் டி20 போட்டிகளில் ஏன் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் தனது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ
பந்துவீச கடினமான இந்த ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக பந்து வீசிய அவர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் அதிரடியை சற்று நிறுத்தியதோடு அந்த அணியின் இரண்டு வீரர்களையும் ஆட்டமிழக்க வைத்து அசத்தியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



