பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி குடியரசுத் தலைவரிடம் உயரிய விருதை வாங்கியுள்ளார். உள்ளூரில் அதிரடியாக விளையாடிய அவருக்கு இந்தியாவுக்காக அண்டர்-19 அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அதிரடியான சதமடித்து சாதனை படைத்தார்.
அப்போது முதல் முறையாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சூரியவன்சியை ஐபிஎல் தொடரில் வாங்கிய ராஜஸ்தான் அணி விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அவர் குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் சதமடித்தார். அதனால் ஐபிஎல் தொடரில் வேகமான சதமடித்த இந்திய வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையையும் அவர் படைத்தார்.
14 வயதில் அசத்தல்:
அப்படியே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர்களில் இந்தியா ஏ அணிக்காக அதிரடியாக விளையாடிய சூரியவன்சி வெற்றிகளில் பங்காற்றினார். 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அமீரகத்துக்கு எதிராக அவர் 171 ரன்கள் குவித்து மற்றொரு சாதனை படைத்தார். 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் 190 ரன்கள் அடித்து அசத்தினார்.
குறிப்பாக 59 பந்துகளில் 150 ரன்கள் குவித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150+ ரன்களை அடித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் (64 பந்துகள்) சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அப்படி இளம் வயதிலேயே அனைவரும் வியக்கும் வகையில் விளையாடி வரும் சூரியவன்சி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
ஜனாதிபதி கையால் விருது:
அதனால் “பிரதம மந்திரி ராஷ்த்ரிய பால் புரஸ்கார்” எனும் இந்திய அரசின் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் வைபவ் சூரியவன்சி பெற்றுள்ளார். அது இந்தியாவில் 5 – 18 வயதுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே மிகவும் உயரிய விருதாகும். அந்த விருது தைரியம், கலைக் கலாச்சாரம், சூழ்நிலை, கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவில் சாதிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 20 விக்கெட்ஸ்.. 21ஆம் நூற்றாண்டு காணாத போட்டியில்.. இங்கிலாந்தை பதிலுக்கு தெறிக்க விட்ட ஆஸி
அதில் விளையாட்டு பிரிவில் இந்தியாவுக்காக பெருமை சேர்த்து வரும் சூரியவன்சிக்கு பால் புரஸ்கார் விருதை வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவித்துள்ளது. அந்த இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சூரியவன்சி பெற்றுக் கொண்டார். அதனால் பலருடைய வாழ்த்துக்களைப் பெறும் அவர் அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



