ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை காண்பித்து பாராட்டுகளைப் பெற்றனர். அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி உலகத்தையே வியக்க வைத்தார் என்று சொல்லலாம். ஏனெனில் தனது முதல் போட்டியிலேயே சிக்சர் அடித்த அவர் குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் சதத்தை அடித்தார்.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்த சூரியவன்சி ஐபிஎல் தொடரில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரராக வரலாறு படைத்தார். இந்நிலையில் ரசித் கான் முதல் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை தரமான பவுலர்களை அடித்து நொறுக்கிய சூரியவன்சி திறமையான வீரர் என்று இங்கிலாந்தின் நட்சத்திரம் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.
லாரா, யுவராஜ் சிங் போல:
மேலும் பிரைன் லாரா, யுவராஜ் சிங் போல பேட்டை சுழற்றும் திறமையை அவர் கொண்டிருப்பதாகவும் பட்லர் தெரிவித்துள்ளார். இது பற்றி பட்லர் பேசியது பின்வருமாறு. “என்னை விட 20 வருடம் குறைந்த வயது கொண்ட இந்தப் பையன் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கினார். அவரைப் போன்ற 14 வயது பையன் விளையாடத் தேர்வு செய்யப்பட்டதே இந்த உலகத்திற்கு ஆச்சரிய அலைகளை உண்டாக்கியது”
“தன்னுடைய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவரைப் போன்ற பயமற்ற வீரர்களை நான் மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக எங்களுடைய குஜராத்துக்காக எதிராக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற சர்வதேச பவுலர்களுக்கு எதிராகவும் உலகின் சிறந்த டி20 பவுலரான ரசித் கானுக்கு எதிராகவும் அவர் அசத்தினார். அவர்களை சாதாரண பவுண்டரிகளாக அல்லாமல் அவர் பெரிய சிக்சர்களாக அடித்தார்”
பட்லர் பாராட்டு:
“அன்றைய நாளில் அவர் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்தது மூர்க்கத்தனமானது. பின்னர் சென்னையில் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர்களையும் அவர் அதிரடியாக எதிர்கொண்டார். அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இவர் தான் நான் பார்த்த சிறந்த வீரரா? என்று தோன்றியது. அவர் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக எதிர்கொண்டு பயமின்றி 100 ரன்கள் அடித்தார்”
இதையும் படிங்க: மெக்ராத் மாதிரி இந்த திறமை கொண்டுள்ள பும்ரா.. 160 கி.மீ சோயப் அக்தரை விட பெஸ்ட்.. ஸ்டுவர்ட் ப்ராட்
“அவர் 12 வயதில் கிரிக்கெட்டை விளையாட துவங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். பீகார் போன்ற நிறைய கிரிக்கெட்டர்கள் உருவாகாத மாநிலத்திலிருந்து வந்த அவர் ஆஸ்திரேலிய அண்டர்-19 அணிக்கு எதிராக வேகமான சதத்தை அடித்தார். அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அவருடைய ஆச்சரியமான பேட் ஸ்விங்கை மக்கள் பார்த்திருப்பார்கள். அது கொஞ்சம் யுவ்ராஜ், ப்ரைன் லாரா போல இருக்கிறது என்று சொல்வது பெரிய கருத்தாகும்” எனக் கூறினார்.



