இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்டர் 19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. 3வது போட்டியில் மீண்டும் இந்தியா வென்ற நிலையில் 4வது போட்டி ஜூலை 5ஆம் தேதி வோர்செஸ்டர் நகரில் இருக்கும் கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 363/9 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வைபவ் சூர்யவன்சி – விஹான் மல்கோத்ரா சதத்தை அடித்து அசத்தினார்கள்.
சூர்யவன்சி உலக சாதனைகள்:
அதில் 52 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட சூரியவன்சி மொத்தம் 13 பவுண்டரி 10 சிக்ஸருடன் 143 (78) ரன்கள் விளாசினார். அதன் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் மற்றும் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை சூரியவன்சி படைத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய மல்கோத்ரா 129 (12) ரன்கள் குவித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் ஹோம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்த விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 45.3 ஓவரில் 308 ரன்களுக்கு சுருட்டி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டாகின்ஸ் 67, ஜோசப் மூர்ஸ் 52, ஆண்ட்ரூ பிளின்டாஃப் மகன் ராக்கி பிளின்டாஃப் சதத்தை அடித்து 107 (92) ரன்கள் விளாசினார். அதனால் 3 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக நமன் புஷ்பக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
சுப்மன் கில் போல:
முன்னதாக பர்மிங்கம் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியின் 2வது நாள் ஆட்டத்தை இந்திய அண்டர்-19 அணியினர் நேரடியாக கண்டுக்களித்தனர். அப்போட்டியில் கேப்டன் கில் 269 ரன்கள் அடித்தது தமக்கும் உத்வேகத்தை கொடுத்ததாக சூர்யவன்சி தெரிவித்துள்ளார். எனவே அடுத்தப் போட்டியில் தாமும் இரட்டை சதமடிப்பேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“சாதனையை படைத்தேன் என்பது எனக்குத் தெரியாது. 100 ரன்கள் அடித்த பின் எங்களுடைய அணி மேனேஜர் அன்கித் சார் நான் சாதனை படைத்ததாக சொன்னார். அடுத்தப் போட்டியில் நான் 200 ரன்கள் அடிக்க முயற்சி செய்வேன். முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முயற்சிப்பேன். நான் எவ்வளவு ரன்கள் அடிக்கிறேனோ இந்திய அணி அவ்வளவு பயன்பெறும்”
இதையும் படிங்க: 16 ரன்ஸ்.. 11க்கு 11 தோல்விகள்.. இலங்கையை வீழ்த்திய வங்கதேசம்.. கொழும்புவில் 23 வருட சாதனை வெற்றி
“சுப்மன் கில்லிடமிருந்து நான் உத்வேகத்தை பெற்றேன். 100 ரன்கள் அடித்த பின்பும் ஓயாத அவர் 200 ரன்கள் அடித்து அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். நான் அவுட்டான பின் 20 ஓவர்கள் இருந்தது. எனவே என்னுடைய 100% பங்களிப்பை கொடுக்கவில்லை. இனிமேல் கில் போல நீண்ட இன்னிங்ஸ் விளையாட முயற்சிப்பேன்” என்று கூறினார்.