
ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை தோற்கடித்தது. அடுத்ததாக இந்தியா தங்களது 2வது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டி ஜனவரி 17ஆம் தேதி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள புலவாயோ நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு துவங்கியது.
அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 48.4 ஓவரில் 238 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வைபவ் சூரியவன்சி 72 (67), அபிஞான் குண்டு 80 (112) ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக அல் பகத் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக வங்கதேசம் விளையாடிய போது மழை வந்ததால் 29 ஓவரில் 165 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய வங்கதேசத்தை அபாரமாக பந்து வீசிய இந்தியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹக்கீம் தமீம் 51 ரன்கள் எழுத்து நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதனால் டிஎல்எஸ் விதிமுறைப்படி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அண்டர்-19 அணி இத்தொடரில் தங்களது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மல்கோத்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக இப்போட்டியில் வைபவ் சூரியவன்சி முதல் முறையாக ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக அரை சதமடித்தார்.
குறிப்பாக கடந்த போட்டியில் சொதப்பிய அவர் இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி 30 பந்துகளில் 50 ரன்களை கடந்து 6 பவுண்டரி 3 சிக்சருடன் 72 ரன்கள் குவித்தார். அதை அவர் தன்னுடைய 14 வருடம் 296 நாட்கள் வயதில் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை போட்டியில் மிகவும் இளம் வயதில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி அண்டர்19 உ.கோ: 124/3 டூ 146க்கு அவுட்.. மழைக்கு பின் மேஜிக் செய்து.. வங்கதேசத்தை ஊதித்தள்ளிய இந்தியா
இதற்கு முன் 2014 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர் சஹீதுல்லா கமல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 15 வருடம் 19 நாட்கள் வயதில் 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அந்த 11 வருட சாதனையை இந்தியாவைச் சேர்ந்த வைபவ் சூரியன்சி முறியடித்துள்ளார். அதே பட்டியலில் 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் 15 வருடங்கள் 92 நாட்கள் வயதில் 50+ ரன்கள் அடித்து 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.