52 பந்தில் சதம்.. 13 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. பாக் வீரரை முந்திய சூர்யவன்சி 2 உலக சாதனை.. இங்கிலாந்தை விளாசல்

Vaibhav Suryavanshi
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர்-19 அணி அங்கே 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. 3வது போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் முன்னிலைப் பெற்றது. அந்த நிலையில் 4வது போட்டி ஜூலை 5ஆம் தேதி வோர்செஸ்டர்ஷைரில் இருக்கும் நியூரோட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே 5 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் சூரியவன்சி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விகான் மல்கோத்ரா நிதானமாக விளையாடி கை கொடுத்தார்.

- Advertisement -

சூர்யவன்சி மிரட்டல்:

அதைப் பயன்படுத்திய சூரியவன்சி வேகமாக ரன்களைக் குவித்து அரை சதத்தை விளாசி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். கடந்த ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் இளம் வயதில் டி20 சதத்தை அடித்த வீரராக உலக சாதனை படைத்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதே வேகத்தில் இந்தத் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர் ஏற்கனவே 45, 45, 86 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

அதன் தொடர்ச்சியாக இந்தப் போட்டியிலும் வெளுத்து வாங்கிய அவர் 52 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச இளம் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த கம்ரான் குலாம் 53 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

2 உலக சாதனை சதம்:

இது போக 14 வருடம் 100 நாட்களில் சதமடித்துள்ள சூர்யவன்சி மிகவும் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக வங்கதேசத்தின் தற்போதைய கேப்டன் நஜ்முல் சாண்டோ 14 வருடம் 241 நாட்களில் சதத்தை அடித்ததே முந்தைய உலக சாதனை. தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிய அவர் 13 பவுண்டரி 10 சிக்சர்களைப் பறக்க விட்டு 143 (78) ரன்கள் 183 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஒரு வழியாக அவுட்டானார்.

இதையும் படிங்க: 23 சிக்ஸ்.. பென் ஸ்டோக்ஸை முந்திய ரிஷப் பண்ட்.. வெளிநாட்டு மண்ணில் மாபெரும் உலக சாதனை

அடுத்து வந்த ராகுல் குமார், ஹர்வன்ஸ் பங்காலியா டக் அவுட்டானார்கள். ஆனால் சூரியவன்சியுடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய மல்கோத்ரா தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து கேப்டன் அபிஞ்சான் குண்டு நிதானமாக விளையாடினர். அதனால் இந்த பதிவிடும் போது இந்தியா 40 ஓவரில் 296/4 ரன்களை எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா 350க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றி பெறுவதற்கு தேவையான நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement