
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி கடந்த ஆண்டு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி மிக இளம் வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தினார். அதோடு 14 வயதிலேயே சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
15 வயதான அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி பிரமாதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இவ்வேளையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 46 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் அடித்த 3 சிக்சர்களின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அபிஷேக் ஷர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அடித்த 3 சிக்சர்களோடு சேர்த்து இந்த தொடரில் மட்டும் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்சி 43 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அபிஷேக் சர்மா ஒரு சீசனில் 42 சிக்ஸர்களை அடித்ததே இந்திய வீரர் ஒருவர் ஒரு சீசனில் அடித்த அதிக சிக்ஸர்களாக இருந்தது. இவ்வேளையில் அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி இந்த எண்ணிக்கையை 50-ஆக மாற்றக்கூட வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் 39 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 38 சிக்ஸர்களை ஒரு சீசனில் அடித்து நான்காவது இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க : இந்த வெற்றி எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.. ராஜஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய – அக்சர் படேல்
மேலும் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் சீசன் ஒன்றில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக கிரிஸ் கெயில் 59 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்றால் அந்த எண்ணிக்கையை நெருங்கவும் அவருக்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.