59 பந்தில் 150 ரன்ஸ்.. ஏபிடி’யின் 10 வருட சாதனையை நொறுக்கிய சூர்யவன்சி.. புதிய 2 உலக சாதனை

Vaibhav Suryavanshi 2
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் பிளேட் பிரிவில் இடம் வகிக்கும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் அணிகள் மோதிய லீக் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 14 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி வழக்கம் போல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து 158 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த மங்கள் மஹ்ரோர் 33 (43) ரன்களை எடுத்த போது அவுட்டானார். மறுபுறம் அருணாச்சல பிரதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய சூரியவன்சி 36 பந்துகளில் சதத்தை அடித்தார்.

- Advertisement -

சூர்யவன்சி 2 உலக சாதனை:

இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் வேறு யாரும் லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் 15 வயதுக்குள் சதமடித்ததில்லை. தொடர்ந்து எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியாக விளையாடிய அவர் 59 பந்துகளில் 150 ரன்கள் தாண்டி பீகாரை வலுப்படுத்தினார்.

அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அவருடைய 10 வருட சாதனையை உடைத்த சூர்யவன்சி இன்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பீகார் மிரட்டல்:

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 பவுண்டரி 15 சிக்ஸருடன் 190 (84) ரன்கள் குவித்து அவுட்டானார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய பியூஸ் சிங் அரை சதமடித்து 77 (66) ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்து வந்த ஆயுஸ் லோகருகா தமது பங்கிற்கு அதிரடியாக சதத்தை அடித்தார்.

இதையும் படிங்க: சுப்மன் கில் டிராப் ஆனதுக்கு காரணமே சூரியகுமார் யாதவ் தான் – ராபின் உத்தப்பா கருத்து

அதே போல கேப்டன் ஷாகிபுல் கானி அருணாச்சல பிரதேசத்தை அடித்து அரை சதமடித்தார். அதன் காரணமாக இப்போட்டியில் பீகார் 500 ரன்கள் தாண்டி அசத்தியுள்ளது. அதனால் இப்போட்டியில் பீகார் வெற்றி பெறுவதும் அருணாச்சல பிரதேசம் படுதோல்வியை சந்திப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Advertisement