IND vs WI : சொதப்பிய இந்தியாவுக்கு 5 வருடத்துக்கு பின் நேர்ந்த பரிதாபம் – மோசமான வரலாற்றை வெஸ்ட் இண்டீஸ் நிறுத்தியது எப்படி?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் இந்தியா தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியிலேயே வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற காரணத்தால் உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் வகையிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் ஜூலை 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கிய 2வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்து தங்களது இடத்தை கொடுத்தனர்.

அதனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் தடுமாற்றமாகவே செயல்பட்டு 34 (49) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட இசான் கிசான் அரை சதமடித்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 55 (55) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
ஆனால் அடுத்ததாக வந்து அக்சர் பட்டேல் 1 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 (14) ரன்களில் நடையை கட்டினார். அப்போது காப்பாற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 9 (19) ரன்களில் ஆட்டமிழந்து ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களையும் தலை குனிய வைத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா 10 (21) ரன்களில் அவுட்டாக சூரியகுமார் யாதவ் மீண்டும் 24 (25) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

அதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள முடியாத அளவுக்கு அடுத்ததாக வந்த சர்துல் தாக்கூர் 16, உம்ரான் மாலிக் 7, முகேஷ் குமார் 6 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த வெஸ்ட் இண்டீஸ் 40.5 ஓவரிலேயே இந்தியாவை வெறும் 181 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி மற்றும் ரோமாரியா செஃபார்ட் தலா 3 விக்கெட்டுகளும் அலசாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ப்ரெண்டன் கிங்கை ரன்களில் அவுட்டாக்கிய ஷார்துல் தாகூர் அதே ஓவரிலேயே 4 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸை (23) அவுட்டாக்கி வெற்றிக்கு போராடினார். மேலும் வந்த அலிக் அதனேஷையும் 6 (9) ரன்னில் அவர் அவுட்டாக்கியதால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை பெற்ற நிலையில் அடுத்த சில ஓவர்களில் நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மயரும் 9 (15) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

இருப்பினும் இலக்கு மிகவும் குறைவாக இருந்ததை பயன்படுத்தி மறுபுறம் கடந்த போட்டியில் அசத்திய கேப்டன் ஷாய் ஹோப் இந்த போட்டியிலும் நங்கூரமாக நின்று 2 பவுண்டரி 2 சிக்சருடன் 63* (80) ரன்களும் கேசி கார்ட்டி தனது பங்கிற்கு 4 பவுண்டரியுடன் 48* (65) ரன்களும் எடுத்தனர். அதன் காரணமாக 36.4 ஓவரிலேயே 182 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

மறுபுறம் தாக்கூர் 3 விக்கெட்களை எடுத்துப் போராடியும் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 2019க்குப்பின் 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸிடம் பரிதாபமாக தோன்றது. அதாவது கடந்த 2019இல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹெட்மயர் 139, ஹோப் 102* ரன்கள் எடுத்த உதவியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அதன் பின் தொடர்ச்சியாக இந்தியாவிடம் தோற்று வந்தது.

இதையும் படிங்க:IND vs WI : எப்போ வாய்ப்பு கெடச்சாலும் இப்படித்தான் நடக்குது. சஞ்சு சாம்சனால் – வருத்தமடைந்த ரசிகர்கள்

ஆனால் தற்போது 5 வருடங்கள் கழித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மிகப்பெரிய மறுமலர்ச்சி வெற்றியை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். மறுபுறம் சோதனை முயற்சியில் இளம் வீரர்கள் சொதப்பியதால் இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement