இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது தற்போது முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரரான உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இன்னும் வலுவான நிலையை அடையவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த உஸ்மான் கவாஜா 13 ஆண்டுகளுக்கு பிறகு இடதுகை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இந்திய மண்ணில் சதம் அடித்த நபராக ஏற்கனவே சாதனை படைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் நடந்த 10 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் ஒருநாள் முழுவதும் பேட்டிங் செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் இந்திய அணிக்கு எதிரான டெல்லி டெஸ்டின் போது மூன்றாவது நாள் முழுவதுமாக பேட்டிங் செய்திருந்தார்.
இதையும் படிங்க : வீடியோ : ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட ரோஹித். கேப்டன் பேட்சை மதிக்காம என்ன பண்றாரு பாருங்க
அதனை தொடர்ந்து தற்போது கவாஜா இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் முதல் பந்தில் தொடங்கி கடைசி வரை (104 ரன்கள் வரை) ஆட்டமிழக்காமல் ஒருநாள் முழுவதுமாக பேட்டிங் செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



