இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. மேலும் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் வெல்ல முடியாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் நழுவ விட்டது.
அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெயஸ்வால், நித்திஷ் ரெட்டி ஆகியோரின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்தத் தொடரில் அந்த மூவரும் தான் பெரும்பாலான போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்கள். அதில் ஜெயஸ்வால் தம்முடைய வாழ்நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடினார்.
ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால்:
அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு 161 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் குவித்த இந்திய வீரராக ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். அந்த வகையில் முதல் போட்டியின் வெற்றியில் பங்காற்றிய அவர் அதற்கடுத்த போட்டிகளிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 391 ரன்கள் குவித்தார்.
அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் 23 வயதிற்குள் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் ஜெய்ஸ்வால் உடைத்தார். அந்த வகையில் முதல் தொடரிலேயே சவாலான ஆஸ்திரேலியாவில் அசத்திய அவர் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய முதல் ஆஸ்திரேலிய தொடர் பற்றி இன்ஸ்டாகிராமில் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
தம்பிக்கு வாழ்த்து:
“ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். துரதிஷ்டவசமாக நாங்கள் நம்பிய முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் மீண்டும் வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா. “உங்களுடைய ஆட்டத்தை விரும்பினேன் தம்பி (பிரதர்)” என்று அன்பான எமோஜிக்களுடன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திரும்புவது எப்போது? – வெளியான புதிய தகவல்
அதே போல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன். “நீங்கள் சூப்பர் ஸ்டார். நீங்கள் விளையாடியதை மகிழ்ச்சியுடன் பார்த்தேன்” என்று வாழ்த்தியுள்ளார். அந்த வகையில் அறிமுகமானது முதல் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் அவருக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சவால் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



