இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த தொடரின் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இருப்பினும் உலகக்கோப்பை தொடர் முழுவதுமே அவர் தனது கணுக்கால் காயத்துடன் போராடி இருந்தது அந்த தொடரின் முடிந்த பின்னர் தான் தெரிய வந்தது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கம்பேக் எப்போது? :
பின்னர் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சையை லண்டன் சென்று மேற்கொண்ட முகமது ஷமி கடந்த ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் மெல்ல மெல்ல பயிற்சியினை மேற்கொண்ட அவர் படிப்படியாக உடற்தகுதியை எட்டி வந்தார்.
இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு உடற்தகுதி இல்லாமல் தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப மாட்டேன் என்று கூறி அந்த தொடரில் இருந்தும் விலகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் எப்போது இந்திய அணியுடன் இணைவார்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்கால் அணிக்காக விஜய் ஹாசரே தொடரில் பங்கேற்று விளையாடி வரும் முகமது ஷமி அந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
எனவே பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் அவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஒருவேளை அந்த தொடருக்காக அவரை தயார்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ நினைத்தால் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியிலேயே இணைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவும் வேணாம்.. சுப்மன் கில்லும் வேணாம்.. புதிய துணைக்கேப்டன் யார்? – வெளியாகப்போகும் அறிவிப்பு
இந்திய அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



