
அமெரிக்காவில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அப்படியே வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அதில் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
முன்னதாக அமெரிக்காவில் காலம் காலமாக பேஸ்பால், கால்பந்து போன்ற வீரர் விளையாட்டுகள் புகழ்பெற்றதாக இருந்து வருகிறது. ஆனால் நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட கிரிக்கெட் அந்த விளையாட்டுகளுக்கு நிகரான பிரபலத்தை கொண்டிருக்கவில்லை. அதனால் இம்முறை கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஐசிசி 2024 உலகக் கோப்பையின் கணிசமான போட்டிகளை அமெரிக்காவில் நடத்தி வருகிறது.
ஜாம்பவானுக்கு சோதனை:
அதனால் அமெரிக்காவில் இத்தொடருக்காக பிரத்தியேகமாக 3 மாதங்களில் சில மைதானங்கள் கட்டமைக்கப்பட்டு அதில் செயற்கையாக பிட்ச்கள் பொருத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்காவில் போட்டியை பார்க்க வரும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட்டை விளக்குவதற்காக ஐசிசி பிரத்யேகமான பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைனுக்கு அவரைப் பற்றி தெரியாத உள்ளூர் அமெரிக்க பயிற்சியாளர் பந்து வீசச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஸ்டைன் அங்கே எம்மாதிரியான விளக்கங்களும் பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது என்பதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பற்றி அறியாத ஒரு உள்ளூர் அமெரிக்க பயிற்சியாளர் ஸ்டைனுக்கு எப்படி வேகப்பந்து வீச வேண்டும் என்ற விளக்கத்தை கொடுத்தார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத டேல் ஸ்டைன் “நம்மைப் பற்றி இவருக்கு தெரியவில்லை என்பதை புரிந்துக்கொண்டு கிரிக்கெட்டைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு ரசிகனைப் போல்” அந்த விளக்கங்களை ஆர்வத்துடன் கேட்டார். மறுபுறம் கையை இப்படி மடக்கி வீச வேண்டும் என்ற வகையில் அந்த உள்ளூர் பயிற்சியாளர் அவருக்கு விளக்கத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க: இதுக்கு தான் இவ்ளோ கஷ்டப்பட்டு சீன் போட்டீங்களா.. பாகிஸ்தானை ட்ரெண்டிங் செய்து கலாய்க்கும் ரசிகர்கள்
அதை ஒன்றும் தெரியாத நபரைப் போல் கேட்டுக்கொண்ட ஸ்டைன் அவர் சொன்னது போலவே பந்து வீசி ஜாலியாக பயிற்சிகளையும் எடுத்தார். இறுதியாக “எதுவுமே தெரியாத இந்த அப்பாவி பயிற்சியாளர் எனக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார் என்பதை பாருங்க” என்ற வகையில் டேல் ஸ்டைன் கொடுக்கும் ரியாக்னுசடன் அந்த வீடியோ முடிகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் சச்சின் போன்ற பல ஜாம்பவான்களை திணறடித்து 699 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த ஜாம்பவான் டேல் ஸ்டைனை தெரியாத அளவுக்கு அமெரிக்கா கிரிக்கெட்டில் அப்பாவியாக இருப்பதை நினைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.