ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளால் ஆரம்பத்திலேயே முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்காக சோகத்தில் மூழ்காத சிஎஸ்கே அணி 2026இல் கம்பேக் கொடுப்பதற்காக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அதில் ஆயுஷ் மாத்ரே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 94 (48) ரன்கள் அடித்து அனைவரது பாராட்டுகளை பெற்றார்.
அதே போல மே ஏழாம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அந்தப் போட்டியில் 180 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே 0, ஆயுஷ் மாத்ரே 0 என அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாங்கப்பட்ட இளம் வீரர் உர்வில் படேல் களமிறங்கினார்.
எங்கய்யா இருந்த:
அந்த வாய்ப்பில் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 31 ரன்களை 281.81 ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு அவுட்டானார். அதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த? என்று ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். ஏனெனில் இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக முதல் 11 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் எந்த பேட்ஸ்மேனும் 3 சிக்சர்களுக்கு மேல் அடிக்கவில்லை.
அப்படிப்பட்ட நிலையில் தனது அறிமுகப் போட்டியிலேயே உர்வில் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியில் குறைந்தது 10 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை (281.81) கொண்ட சிஎஸ்கே பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ரெய்னாவை முந்திய உர்வில்:
அந்த சாதனை பட்டியலில் இதற்கு முன் 2008ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா தனது அறிமுகப் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 246.66 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 3வது இடத்தில் இருக்கிறார். 2024இல் ரச்சின் ரவீந்திரா தனது அறிமுகப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக 260.00 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே முந்தைய சாதனை. தற்போது அவர்கள் இருவரையும் முந்தியுள்ள உர்வில் படேல் சிஎஸ்கே அணிக்கு மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திர இளம் வீரராக கிடைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் திடீர்னு ரிட்டையராக இதான் காரணம்.. ஹிட்மேனை எல்லாரும் மிஸ் பண்ணுவோம்.. சேவாக் பேட்டி
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அஸ்வின், ஜடேஜாவும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 60/5 என தடுமாறிய சிஎஸ்கே அணிக்கு தேவால்ட் ப்ரேவிஸ் அடித்து நொறுக்கி 52 (25) ரன்கள் எடுத்தார். அவருடன் சிவம் துபே 45, தோனி 18*, கம்போஜ் 4* ரன்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு 3வது ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.



