ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பல எதிர்பாராத திருப்பங்களுடன் 4 வாரங்களை கடந்து மும்பை நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக சென்னை அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என சாதனை படைத்த எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகியது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் இந்தியாவை போலவே ஒவ்வொரு வருடமும் தனது அபார கேப்டன்ஷிப்பால் தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் வரலாற்றில் சென்னையை ஒரு வெற்றிகரமான அணியாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர்.

அதன் காரணமாகவே தமிழக ரசிகர்களால் “தல” என கொண்டாடப்படும் அவர் சென்னையின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக கருதப்படுகிறார். இருப்பினும் 40 வயதை கடந்த அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை மற்றொரு நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடும் முடிவை எடுத்தார்.
தொடர் தோல்விகள்:
மறுபுறம் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் ஐபிஎல் 2022 தொடரை துவக்கிய சென்னை முதல் 4 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. இத்தனைக்கும் அவருக்கு உறுதுணையாக எம்எஸ் தோனி இருந்தபோதிலும் தொடர் தோல்விகளால் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப சாதனையை படைத்த ரவிந்திர ஜடேஜா கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அந்த நிலைமையில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குஜராத்துக்கு எதிராக மீண்டும் தோற்று பரம எதிரியான மும்பைக்கு எதிராக வென்று மீண்டும் பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் தோற்றது. தற்போதைய நிலைமையில் 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்துள்ள சென்னை அடுத்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது 90% கடினமாக மாறியுள்ளது.
ஜடேஜாவுக்கு அழுத்தம்:
அந்த அணியில் 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அணியில் இருக்கும் இதர பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் கைகொடுக்க தவறி வருகின்றனர். அதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் ஒரு அணியாக காட்சியளிக்காத சென்னை 2020க்கு பின் மீண்டும் லீக் சுற்றுடன் வெளியேறும் அணியாகவே தோற்றமளிக்கிறது. இவை அனைத்தையும்விட புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜா அற்புத ஆல்ரவுண்டராக இருந்து வரும் நிலையில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சொதப்ப தொடங்கியுள்ளார்.

குறிப்பாக 2020, 2021 ஆகிய வருடங்களில் சென்னையின் ஃபினிஷராக கருதப்பட்ட எம்எஸ் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறிய வேளையில் அவரின் இடத்தில் களமிறங்கி அதிரடியாக வெற்றிகளை குவித்த ஜடேஜா புதிய பினிஷராக அவதாரம் எடுத்தார். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்த வருடம் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் தவிக்கிறார். அதைவிட உலகின் நம்பர்-1 பீல்டராக கருதப்படும் அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் எளிதான கேட்ச்களை கோட்டை விட்டதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.
மீண்டும் தல தோனி:
மொத்தத்தில் எது எப்படி இருந்தாலும் ஐபிஎல் 2022 தொடரில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவதில்லை என அந்த அணி ரசிகர்கள் சோகத்துடன் காணப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கடைசிநேர ட்விஸ்ட்டாக கேப்டன்ஷிப் அழுத்தம் தனது ஆட்டத்தை மொத்தமாக பாதித்ததாக உணர்ந்த ரவிந்திர ஜடேஜா தற்போது மீண்டும் அந்த பொறுப்பை எம்எஸ் தோனியிடமே ஒப்படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். சாதாரண வீரராக தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பும் அவர் அதுபற்றி எம்எஸ் தோனியிடம் தெரிவித்த நிலையில் அதை தோனியும் ஏற்றுக் கொண்டதாக சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதை அடுத்து மே 1-ஆம் தேதி நடைபெறும் ஹைதராபாத்துக்கு எதிரான தனது 9-வது போட்டியில் மீண்டும் எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த முடிவு அந்த அணியை தொடர் வெற்றி பாதைகளுக்கு திருப்பி பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



