வேகத்தில் சாதிக்க பிறந்த உம்ரான் மாலிக், தனது சொந்த சாதனையை உடைத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. கௌகாத்தியில் ஜனவரி 10ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 373/7 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 83 (67) ரன்களும் சுப்மன் கில் 70 (60) ரன்களும் அதிரடியாக குவித்தனர்.

அவர்களை விட மிடில் ஆர்டரில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 113 (87) ரன்கள் விளாசிய நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தை விளாசி அவுட்டான நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 374 ரன்களை துரத்திய அந்த அணிக்கு பெர்னாண்டோ 5, குசால் மெண்டிஸ் 0, அசலங்கா 23 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய உம்ரான்:
அதனால் சரிந்த அந்த அணிக்கு டீ சில்வா 47, நிஷாங்கா 72 என முக்கிய பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை குவித்து போராடி முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். இருப்பினும் வழக்கம் போல மிடில் ஆர்டரில் அதிரடியாக வெற்றிக்கு போராடிய கேப்டன் தசுன் சனாகா சதமடித்து 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றாலும் பந்து வீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்த இளம் வீரர் உம்ரான் மாலிக் தன்னுடைய வேகத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக 14வது ஓவரில் 156 கிலோ மீட்டர் வேகப்பந்தை வீசிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராகவும் தன்னுடைய சொந்த சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார். சமீபத்திய இலங்கை டி20 தொடரில் 155 கி.மீ வேகத்தில் வீசிய அவர் தற்போது கூடுதலாக 1 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி தனது முந்தைய சாதனையை ஓரிரு போட்டிக்குள் மீண்டும் உடைத்துள்ளார்.

- Advertisement -

இவருக்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு அடிலெய்ட் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜஸ்ட்பிரித் பும்ரா 153.33 கி.மீ வேகத்தில் வீசியிருந்ததே முந்தைய சாதனையாகும். முன்னதாக ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்தை (157.00 கி.மீ) வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் (156 கி.மீ), ஒருநாள் கிரிக்கெட்டிலும் (156 கி.மீ) டி20 கிரிக்கெட்டிலும் (155 கி.மீ) அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக அடுத்தடுத்த வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார்.

இத்தனைக்கும் வெறும் 23 வயதில் அறிமுகமான 6 மாதத்திற்குள் தன்னுடைய அசுர வேகத்தில் வீசும் திறமையால் இந்த சாதனைகளை அசால்டாக படைத்துள்ள அவரிடம் நிச்சயமாக வேகத்தில் மிரட்டும் தனித்துவமான திறமை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஆரம்ப காலங்களில் அதிக ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க:வீடியோ : 98 ரன்னில் சனாகாவை மன்கட் செய்த ஷமியை விளாசும் ரசிகர்கள் – மறுத்த ரோஹித்துக்கு குவியும் பாராட்டுக்கள்

ஆனால் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் இந்த 2வது வாய்ப்பில் பெரும்பாலும் அதிக ரன்களை கொடுக்காமல் வேகத்துடன் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தையும் பின்பற்றி எதிரணிகளை அச்சுறுத்தி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் வேகத்தால் சாதிக்க பிறந்தவரைப் போல் அவதரித்துள்ள உம்மரான் மாலிக் இன்னும் வரும் காலங்களில் நிறைய சாதனைகளை படைப்பார் என்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement