IND vs SL : கண்டிப்பா அதிர்ஷ்டத்துடன் அந்த உலக சாதனையை என்னால் உடைக்க முடியும் – உம்ரான் மாலிக் அதிரடி நம்பிக்கை

Umran-1
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா களமிறங்குகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாட உள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் நிறைய சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 உலக கோப்பையில் இளம் ரத்தங்களை கொண்ட புதிய அணியை விளையாட வைக்கும் முயற்சியை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதனாலேயே இத்தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் கழற்றி விடப்பட்டு நிறைய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

அந்த வகையில் வேகப்பந்து வீச்சு துறையில் ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார் இல்லாத நிலைமையில் அர்ஷிதீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் இத்தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா தவற விட்டு விட்டது என்று நிறைய முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய உம்ரான் மாலிக் 2023 உலகக்கோப்பை உத்தேச அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சாதனையை தகர்ப்பேன்:
எனவே அடுத்து வரும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு 2023 உலகக்கோப்பை அணியில் குறைந்தபட்சம் பேக் அப் பவுலராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சொல்லப்போனால் இது அவருக்கு 2வது வாய்ப்பாக கிடைத்துள்ளதால் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 150+ கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பறக்க விட்டு அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக 2022 சீசனில் டெல்லிக்கு எதிரானா போட்டியில்ல 157 கி.மீ வேகத்தில் வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதனால் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்ற அவர் கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமானார். ஆனால் வேகத்தை மட்டுமே நம்பிய அவர் நல்ல லைன் லென்த் போன்ற விவேகங்களை கற்காமல் செயல்பட்டதால் ரன்களை வாரி வழங்கி 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக உலக சாதனை படைத்துள்ள பாகிஸ்தானின் சோயப் அக்தர் சாதனையை தகர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அது மட்டுமே தம்முடைய இலக்கு அல்ல என்று தெரிவிக்கும் அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றி இந்தியாவுக்கு தொடர்ந்து விளையாடுவதே முதன்மை லட்சியம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Shoaib Akhtar Umran Malik

“இப்போதைக்கு நான் என்னுடைய நாட்டுக்காக எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் சிறப்பாக செயல்பட்டால் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயமாக அந்த உலக சாதனையை என்னால் உடைக்க முடியும். ஆனால் அதைப் பற்றி நான் எப்போதும் நினைப்பதில்லை. சொல்லப்போனால் போட்டிகளில் நீங்கள் பந்து வீசிக் கொண்டிருக்கும் போது அதனுடைய வேகத்தை உங்களால் உணர முடியாது. போட்டி முடிந்த பின்பு தான் நீங்கள் எவ்வளவு வேகத்தில் வீசினீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எந்த இடத்தில் பந்து வீசி எப்படி விக்கெட்டுகளை எடுக்கலாம் என்பதே என்னுடைய கவனமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்கஎன்னய்யா சொல்றிங்க? மீண்டும் தொடரப்போகும் ரோஹித் சர்மா – சேட்டன் சர்மா, புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்

முன்னதாக ஐபிஎல் தொடரில் அதிரடியான வேகத்தில் வீசிய அவரால் மட்டுமே சோயப் அக்தரின் உலக சாதனையை முறியடிக்க முடியும் என்று சில முன்னாள் வீரர்கள் அந்த சமயங்களில் பேசினார்கள். சொல்லப்போனால் தன்னுடைய உலக சாதனையை உம்ரான் மாலிக் உடைத்தால் தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவரால் அது முடியும் என்றும் சோயப் அக்தரே நேரடியாக ஐபிஎல் தொடரின் போது பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement