சோயப் அக்தர் உலகசாதனை உடைக்கும் அளவுக்கு புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக் – ஆனாலும் ரசிகர்கள் கவலை

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற 50-ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்த டெல்லி பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 207/3 ரன்கள் சேர்த்தது.

David Warner vs SRH

- Advertisement -

மந்தீப் சிங் 0 (5), மிட்சேல் மார்ஷ் 10 (7), கேப்டன் ரிஷப் பண்ட் 26 (16) போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியதால் 85/3 என தவித்த அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 92* (58) ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக கடைசி 10 ஓவர்களில் மிரட்டிய ரோவ்மன் போவல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி 6 சிக்சருடன் 67* (35) ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார்.

ஹைதெராபாத் தோல்வி:
அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவேண்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 4 (11) அபிசேக் சர்மா 7 (6) என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 22 (18) ரன்களில் அவுட்டாகி சென்றதால் 37/3 என ஆரம்பத்திலேயே அந்த அணியின் தோல்வி உறுதியானது. அந்த மோசமான சூழ்நிலையில் நடுவரிசையில் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் – நிக்கோலஸ் பூரன் பொறுப்பாக 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (25) ரன்கள் எடுத்த மார்க்ரம் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

DC vs SRH Kane Williamson

அந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி செல்ல மறுபுறம் 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 62 (34) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய நிக்கோலஸ் பூரனும் ஆட்டமிழந்ததால் இறுதிவரை 20 ஓவர்களில் 186/8 ரன்கள் மட்டுமே எடுத்த ஐதராபாத் பரிதாபமாக தோற்றது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹமத் 3 விக்கெட்டுகள் எடுக்க 92* ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

மிரட்டல் மாலிக்:
இந்த தோல்வியால் பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு பின் தங்கினாலும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. முன்னதாக இப்போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் முரட்டுத்தனமான வேகத்தில் பந்து வீசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த வருடம் 145 கி.மீ வேகத்தில் வீச துவங்கிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொண்டே வருகிறார்.

Umran Malik

அதிலும் நேற்று 155 கி.மீ வேகத்தை தொட்ட அவர் டெல்லிக்கு எதிராக வீசிய கடைசி ஓவரில் 153, 145, 154 என மிரட்டல் வேகத்தை வெளிப்படுத்தி 4-வது பந்தில் 157 கி.மீ வேகத்தில் வீசி பார்ப்போரை அதிர விட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் 2022 தொடரின் அதிவேக பந்து வீசிய பவுலர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்த அவர் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்துவீசிய 2-வது பவுலர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஷான் டைட் : 157.7 கி.மீ
2. உம்ரான் மாலிக் : 157.0 கி.மீ*

- Advertisement -

சோயப் அக்தர் உலகசாதனை:
இத்தனைக்கும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட நிலையில் இதுவரை ஹைதராபாத் பங்கேற்ற 10 போட்டிகளிலும் அதிவேகமான பந்தை வீசி அதற்கான விருதையும் வென்றுள்ளார். இந்த வயதிலேயே அதிரடியான வேகத்தில் பந்துவீசும் இவர் நிச்சயம் விரைவில் 160 கி.மீ வேகத்தை விரைவில் தொட்டு விடுவார் என இர்பான் பதான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் பாராட்டுகின்றனர்.

இப்படியே சென்றால் நிச்சயம் அதிவேகமான பந்தை வீசி உலகசாதனை படைத்த பாகிஸ்தானின் சோயப் அக்தர் உலக சாதனையையும் உடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளதாக அவரை பாராட்டும் இந்திய ரசிகர்கள் கவலையும் அடைகின்றனர். ஏனெனில் வேகத்திற்கு ஏற்ப ரன்களை வாரி வழங்கும் இவர் நேற்றைய அந்த 157 கி.மீ வேக பந்து வீசியபோது கூட அதை ரோவ்மன் போவெல் அசால்டாக பவுண்டரி அடித்தார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு கிங் ! கிறிஸ் கெயிலின் ஆல் டைம் சாதனையை உடைத்த டேவிட் வார்னர் – புதிய டி20 உலகசாதனை

அத்துடன் நேற்று வீசிய 4 ஓவர்களில் 52 ரன்களை வாரி வழங்கியதால் விவேகமில்லாத வேகத்தில் பயனில்லை எனக் கூறும் ரசிகர்கள் வேகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ரன்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று யுக்தியையும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Advertisement