223 ரன்ஸ்.. ஸ்டீவ் பக்னரை மிஞ்சிய அம்பயர்.. அநியாய தீர்ப்பால் கொதித்த இந்தியா ஏ வீரர்கள்

Aus Umpire
- Advertisement -

ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 7ஆம் தேதி நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

பின்னர் களமிறங்கிய இந்தியா ஏ அணி சுமாராக விளையாடி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணியும் தடுமாற்றமாக விளையாடி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

மோசமான தீர்ப்பு:

அதிகபட்சமாக மார்க்கஸ் ஹாரிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக அந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் 48 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய வீரர் தானுஷ் கோட்டியான் வீசிய ஒரு பந்தை ஹாரிஸ் தடுக்க முயற்சித்தார்.

ஆனால் தரையில் பட்ட பின் சுழன்ற அந்த பந்து ஹாரிஸ் பேட்டில் பட்டு முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் தேவ்தூத் படிக்கல் கைகளில் கச்சிதமாக தஞ்சமடைந்தது. அதன் காரணமாக விக்கெட் கிடைத்ததாக இந்திய அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அது அவுட்டில்லை என்று ஆஸ்திரேலியாவின் அம்பயர் கிரஹாம் ஸ்மித் தெரிவித்தார்.

- Advertisement -

ஸ்டீவ் பக்னர் போல:

அதனால் ஆச்சரியத்துடன் கொதித்த இந்திய அணியினர் இது எப்படி அவுட்டாகாது என்று அம்பயரிடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். அந்த தருணம் பற்றி வர்ணனையாளர்கள் நேரலையில் பேசியது பின்வருமாறு. “எட்ஜ், ஹாரிஷ் அவுட். இல்லை அவர் அவுட்டில்லை. இதை இந்தியர்களால் நம்ப முடியவில்லை. அம்பயர் கிரஹாம் ஸ்மித் நகராமலேயே நிற்கிறார்”

இதையும் படிங்க: ஸ்டார், சோனி கிடையாது.. இந்தியா – தெ.ஆ டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? அட்டவணை இதோ

“வெறும் கண்களால் பார்க்கும் போது அது எட்ஜ் போல நன்றாக தெரிகிறது. ஹாரிஸ் களத்திலேயே நிற்கிறார்” என்று கூறினார்கள். இதிலிருந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்ணனையாளர்களே அது அவுட் என்று ஒப்புக்கொண்டது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் ஸ்டீவ் பக்னரை மிஞ்சும் அளவுக்கு கிரகாம் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக அநியாயத் தீர்ப்பு வழங்கினார் என்றே சொல்லலாம். இதையடுத்து இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement